IMF:காலில் வீழ்வதா? இன்று ஆராய்வு!
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று (03) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
வழமைப்போன்று அல்லது மிகவும் இரகசியம் காக்கும் வகையில், மூடிய கதவுகளுக்குள் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அறியமுடிகின்றது.
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்றைய விசேட அமைச்சரவையில் ஆகக் கூடுதலான கவனம் செலுத்தப்படுமென அறியமுடிகின்றது.
இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர் ஆர்டிகல ஆகியோரும் பங்கேற்று, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கையிருப்பு உள்ளிட்டவை தொடர்பில் அமைச்சரவைக்குத் தெளிவுப்படுத்துவர்.
இந்நிலையில், தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு புத்தாண்டுக்கு முன்னரே, அமெரரிக்கவுக்குச் சென்றிருந்த நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, 2022 புத்தாண்டு தினத்தன்று நாடு திரும்பினார். அவரும் இன்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டாயமாக பங்கேற்பார்.
இன்றைய விசேட அமைச்சரவையில், சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற்றுக்கொள்வது தொடர்பில் மட்டுமே விரிவாக ஆராயப்படும்
முடங்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை இலங்கைக்கு இல்லையென்பதில் மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் உறுதியாக இருக்கிறார்.
எனினும், சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டுமென அமைச்சர்கள் சிலர் விரும்புகின்றனர். அரசாங்கம் அங்கு செல்லக்கூடாதென அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தான் தனிப்பட்ட முறையில் நம்புவதாக அமைச்சர் சி.பி ரத்நாயக்க கூறினார். ” சர்வதே நாணய நிதியம், எங்கள் மீது விதிக்க விரும்பும் அனைத்து நிபந்தனைகளையும் நாங்கள் கடைப்பிடிக்கிறோம் என்று அர்த்தமல்ல, ஆனால், குறைந்தபட்சம் நாங்கள் ஒரு உரையாடலையாவது ஆரம்பிக்கவேண்டும். சர்வதேச நாணய நிதியத்தை நிராகரிப்பதும் மக்களுக்கு உதவாது என்றார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் செல்ல வேண்டுமென தாம் நம்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சரவையில் இருக்கும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.