November 25, 2024

தமிழ்த் தரப்பினர் மீண்டும் சந்தித்தனர்

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்தகோரிக்கையை விடுக்கும் விதமாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகள் இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணமொன்றை சகல தமிழர் தரப்பும் கைச்சாத்திட்டு இன்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் கையளிக்கவும் தீர்மானித்துள்ளனர்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளும் விதமாக இந்தியாவிடம் ஒருமித்த கோரிக்கையை விடுக்கும் வகையில், தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி இன்று , கொழும்பு வெள்ளவத்தை குளோபல் டவர் ஹோட்டலில் கலந்துரையாடினர்

தமிழ் பேசும் கட்சிகள்  இதற்கு முன்னர் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வெள்ளவத்தை குளோபல் டவர் ஹோட்டலில் ஒன்றுகூடி இந்த விடயங்களை ஆராய்ந்திருந்த நிலையில், அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதும் இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தை குளோபல் டவர் ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதுடன், இந்த சந்திப்பில் இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணத்தை இறுதிப்படுத்தி அதில் சகல தமிழ் பேசும் கட்சிகளின் கையொப்பத்தை பெற்றுக்கொண்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கவுள்ளதாக இந்த செயற்பாடுகளின் ஏற்பாட்டாளரான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செம்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மனோ கணேசன், சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் இவர்களுடன் என்.  ஸ்ரீகாந்தா ஆகியோரும் கலந்து கொண்டனர்.