வைத்தியர்களிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம்!
தான்தோன்றித்தனமான சுகாதார அமைச்சின் செயற்பாடுகளால் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உருவாகுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிளைகள் கூட்டாக இதனை வலியுறுத்தின.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் மற்றும் ஆலோசனை இல்லாமல் சுகாதார அமைச்சினால் வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமையை ஏற்க முடியாது.
இடமாற்ற சபையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வகிபாகம் என்பது சட்ட நடைமுறைக்குட்பட்டது என்பதுடன் ஸ்தாபன விதிக்கோவைக்கு உட்பட்டதாகும்.
கடந்த காலங்களில் சீரான வைத்திய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பங்கு இன்றியமையாதது ஆகும்.
ஆனால் தற்போது பிரதான பங்காளிகளின் ஆலோசனைகள் பெறாமல் இடமாற்றங்களை செய்திருப்பது எமக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான்தோன்றித்தனமான சுகாதார அமைச்சின் செயற்பாடுகளால் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உருவாகும்.
குறிப்பாக கிராமிய சுகாதர சேவை, இடர் பிராந்திய வைத்திய நிலையங்கள், கொரோனா சிகிச்சை நிலையங்கள் என்பவற்றில் பின்னடைவு ஏற்பட இது வாய்ப்பாக அமையும்.
ஓமிக்ரோன் தொற்று பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில் சுகாதார அமைச்சின் இவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படப்போவது பொதுமக்களே. இதன் காரணமாக இதனை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமாகிய நாம் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை 8 மணிமுதல் முன்னெடுத்து வருகின்றோம்.
சுகாதார மற்றும் சுகாதார அதிகாரிகளும் பொறுப்புடன் நடந்து கொள்வதுடன் உரிய தரப்புகளுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
இவ்வாறு செயற்படும் போது சுகாதார செயற்பாடுகளில் ஏற்படும் அனைத்து பின்னடைவுகளுக்கும் சுகாதார அமைச்சே பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றனர்.
இந்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணம், மன்னார்,கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி,பருத்தித்துறை பகுதிகளைச் சேர்ந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.