சிறிதரன் கூட்டத்திலிருந்து வெளியேறிய பின்னர் நடந்தது என்ன? – சுமந்திரன் வெளியிட்ட தகவல்
சிறிதரன் வெளியேறிய பின்பு நானும் சித்தார்த்தனும் தமிழ்மொழியில் கலந்துரையாடப்படாவிட்டால் நாங்களும் வெளியேறிவிடுவோமென தெரிவித்ததன் பின்னர் அதிகமாக தமிழ் மொழியிலேயே கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்ததென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற வடக்கு மாகாண அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழிலே கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை சிறிதரன் முன்வைத்தார். அதனை ஏற்றுக்கொண்டு தமிழிலும் ஆங்கிலத்திலுமாக கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.
சிறிதரன் வெளியேறிய பின்பு நானும் சித்தார்த்தனும் தமிழ்மொழியில் கலந்துரையாடப்படாவிட்டால் நாங்களும் வெளியேறிவிடுவோமென தெரிவித்ததன் பின்னர் அதிகமாக தமிழ் மொழியிலேயே கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தது.
தேவையான மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டது. விசேடமாக காணி விடுவிப்பு சம்பந்தமாக கலந்துரையாடி இருந்தோம் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட காணி விடுவிப்புகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தோம். அது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார். புதிதாக படையினருக்கான காணி சுவீகரிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அது தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். அதனை நாங்கள் பார்க்க வேண்டும் எனக் கேட்டு இருக்கிறோம். அதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டு இருக்கின்றார்.
மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அதிலுள்ள நியாயத் தன்மையை நாங்கள் பார்க்க வேண்டும் எனக் கேட்டோம். காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால் போராடி நாங்கள் அதனை தடுப்போம். சட்டத்தை மீறியேனும் வீதிக்கு இறங்கி போராடுவோம்.அது சம்பந்தமான தெளிவுபடுத்தல் கூட்டங்களை நடத்துவதாக தெரிவித்தார்.விடுக்கப்பட வேண்டிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
கொட்டடியில் உள்ள சமையல் எரிவாயு களஞ்சியசாலை தொடர்பில் நான் கேள்வி எழுப்பியபோது அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் தெரிவித்தார் – என்றார்.