இலங்கை:உரமும் வெடிக்கின்றது!
இலங்கையில் திரவ உரக் கான்கள் வெடித்தமைக்கான காரணத்தை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் மெத்திகா விதானகே விளக்கினார்.
தற்போது உரக்கான் வெடிப்பது நானோ நைட்ரஜன் உரம் அல்ல எனவும் மற்றொரு தரப்பினரால் அறிமுகப்படுத்தப்பட்ட திரவ உரமாகும் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், திரவ உர கான்கள் வெடிப்பதை நாங்கள் காண்கிறோம். இது நனோ நைட்ரஜன் உரம் அல்ல. இந்த வெடிப்பு மற்றொரு தரப்பினரால் அறிமுகப்படுத்தப்பட்ட திரவ உரமாகும். இந்த திரவ உரங்களில் மீன் கழிவுகள் உள்ளன. மீன் கழிவுகளால் இந்த உரத்தில் மிகப் பெரிய அளவில் பாக்டீரியாக்கள் வளரும்.
பாக்டீரியாவும் உயிரினத்தின் ஒரு பகுதியாகும். அவைகளும் சுவாசிக்கின்றன. அப்போது கார்பன் டை ஒக்சைடு போன்ற பல்வேறு வாயுக்கள் உருவாகின்றன. காற்று வெளியேற அனுமதிக்கப்படாததால் கான்கள் வீங்குகின்றன. அழுத்தம் அதிகரிக்கும் போது அது வெடிக்கும்.
கரிம உரங்களை சரியான அளவுகோலின் கீழ் உற்பத்தி செய்யாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தக் கொள்கைக்கு நாங்கள் முன்கூட்டியே தயாராகாததால் பிரச்னைகள் எழுந்துள்ளன. இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இந்த உரங்களின் அறுவடையை பார்க்கலாம். எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காவிட்டால், கடும் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதை இலங்கையால் தாங்கிக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
இம்முறை பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட திரவ உரக் கான்கள் வெடிப்பதாக ஹொரவபொத்தானை பிரதேச விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இம்முறை பயிர்ச்செய்கைக்கு விண்ணப்பிப்பதற்காக விவசாய திணைக்களம் சுமார் 200 திரவ உரங்களை தமது விவசாய அமைப்புக்கு வழங்கியுள்ளதாகவும், சுமார் 100 திரவ உரங்கள் வெடித்து வீணாகி வருவதாகவும் ஹொரவபொத்தானை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு விவசாயத் திணைக்களத்தின் ஊடாக தமது விவசாயிகள் அமைப்பிற்கு வழங்கப்பட்ட கரிம திரவ உரத்தை தாங்கள் பயன்படுத்தும் உரத்தெளிப்பான்கள் ஊடாக தெளிக்க முடியாதுள்ளதாகவும் அவர்கள் மேலும் குற்றம் சுமத்துகின்றனர்.