இப்போதெல்லாம் புத்தர் சிலை வந்தால் பிரச்சனை!
அரச ஆதரவுடன் புத்தர் சிலை வைப்பதும் அப்பிரதேசத்தை கைப்பற்றுவதும் எப்போதோ தீர்மானிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட ஒன்று.இதற்கு எமது தரப்பு தவறுகளும் நிருவாக கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுமே காரணங்களாகும் என தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு .
அம்பாறை மாவட்டம் சங்கமன்கன்டி கோமாரி பிரதேசத்தில் இரவோடு இரவாக திடீரென முளைத்த புத்தர் சிலை தொடர்பில் அங்கு இன்று காலை பதட்ட நிலை உருவாகியுள்ளதாக அறிந்தேன்.
அம்பாறை மாவட்டத்தில் எமது பாரம்பரியம் மிக்க தமிழ் தொல்லியல் வரலாறுகளை கொண்ட பல இடங்கள் அங்கு காணப்பட்டாலும் நான் அறிந்தவன் என்கின்ற வகையில் படிவெட்டு மலையும் அதனோடு அண்டிய பகுதிகளும் புத்தர் சிலை நிறுவது தொடர்பிலும் இங்குள்ள தொல்லியல் அடையாளங்கள் தொடர்பில் உரிமை கொண்டாடுவதும் பிக்குகள் வந்து போவதும் முறுகல் நிலை ஏற்படுவதும் மக்கள் எதிர்ப்பின் பின் கைவிடுவதும் என 2014ம் ஆண்டு முதல் தொடர்கதையாக தொடர்ந்த வண்ணமே உள்ளது.
ஆனாலும் இப்பிரதேசத்தை புனித பூமியாக்குவதற்கான முன்முனைப்பு நடவடிக்கைகள் நல்லாட்சி அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்டு விட்டதாக அறிய முடிகிறது.ஆனாலும் சட்டபூர்வ ஏற்பாடுகள் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்பது மனதுக்கு ஒரு நொடி ஆறுதலை தந்தாலும் தற்போது புத்தர் சிலை நிறுவப்பட்டு சூடுபிடித்திருக்கின்ற இத் தருணத்தில் அப்பிரதேசத்தில் பதட்ட நிலையையும் அமைதியின்மையும் இரு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள ஒரு சிறு முறுகல் நிலைக்குப் பின்னால் அப்பிரதேசத்தில் வாழ்கின்ற ஒரு சிலரும் ஒத்துழைப்பு வழங்கி. மறைமுகமாக இதற்கு துணை போயிருப்பது உண்மையில் மன வேதனையளிக்கிறது.
„எமது தொன்மைகளே எமது இருப்புக்கான மூலாதாரங்கள்“ அவற்றை நாம் பாதுக்காக்க தவறி நமது அறியாமையால் இன்று கூட இருந்து அழிக்க அல்லது மாற்ற துணை போயிருப்பது உண்மையில் வருந்ததக்க விடயமே.
எங்கெல்லாம் பிரச்சனைகள் காணப்படுகிறதோ அங்கெல்லாம் இன முரண்பாடுகளை தோற்றுவித்து தமது இருப்பையும் ஆட்சியையும் தக்கவைத்துக்கொள்வதற்காக தங்களது விசுவாசிகளை அரச தரகர்களாக மக்கள் மத்தியில் இறக்குவது இலங்கை அரசியலுக்கு ஒன்றும் புதிதல்லவே.
அரச ஆதரவுடன் அந்த பகுதியில் புத்தர் சிலை வைப்பதும் அப்பிரதேசத்தை கைப்பற்றுவதும் எப்போதோ தீர்மானிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட ஒன்று.இதற்கு எமது தரப்பு தவறுகளும் நிருவாக கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுமே காரணங்களாகும்.
எனவே உணர்ச்சி அரசியலுக்கு அப்பால் தீர்க்கமான முடிவொன்றை சிந்தித்து இத்தருணத்தில் எடுப்பதே இப்பிரதேசத்தையும் எமது தொல்பொருள் சின்னங்களையும் பாதுகாப்பதற்கான சிறந்த தீர்வாகும் என தெரிவித்துள்ளார்.