November 25, 2024

மிதப்பவை காணாமல் ஆக்கப்படடவர்களுடையதா?

வடக்கில் பல்வேறான கடற்கரையோரங்களில் சடலங்கள் கரையொதுங்குகின்றன. இந்த சடலங்கள் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளனவென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இராணுவத்திடம் சரணடைந்தவர்களா? இவ்வாறு சடலங்களாக கரையொதுங்குகின்றனர் என்றும் கேள்வியெழுப்பினார்.

சரணடைந்தவர்கள், இப்போதுதான் கொலை செய்து கடலில் வீசுகிறார்களா? எனும் சந்தேகமும் எழுந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணியில் கரையொதுங்கிய உடல் எங்கேயென யாருக்கும் தெரியாது. மருதங்கேணி பொலிஸார் அந்த உடலை சென்று பார்த்துள்ளனர். இப்போது அந்த உடலை காணவில்லை. கரையொதுங்கிய உடல் எவ்வாறு காணாமற்போகும்? அதனை யார் எங்கே கொண்டு சென்றனர் என்பது தெரியாதுள்ளது” என்றார்.

சரணடைந்தவர்கள், காணாமல்போனவர்களை வைத்திருந்து, கொலை செய்து கடலில் வீசியுள்ளார்களா? அந்த உடல்கள்தான் கரையொதுங்கியுள்ளனவா? என காணாமல் போனவர்களின் உறவுகளினால் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன என்றார்.

மேலும், பாகிஸ்தானுக்கு 35000 கண்களை இலங்கையில் இருந்து தானம் செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள். அந்த கண்கள் யாருடையவை என்பதில் சந்தேகங்கள் உள்ளன. எனவே இது தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.