März 28, 2025

தனியே தன்னந்தனியே!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழரசுக்கட்சி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கமென்பவை தனித்தனியே கூட்டமைப்பிற்கு உரிமை கோரத்தொடங்கியுள்ளன.

கனடா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிற்கான தமது பயணத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது பயணமென எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் உரிமை கோரிவருகின்றனர்.

இந்நிலையில் கொழும்பில் சர்வதேச நாட்டு தூதுவர்களுடனான தமது சந்திப்புக்களை தமிழீழ விடுதலை இயக்கம் கூட்டமைப்பின் சந்திப்பாக அறிவித்துவருகின்றது.

ஏற்கனவே பிரிட்டன் மற்றும் அமெரிக்க தூதர்களுடன் தனது சந்திப்புக்களை முன்னெடுத்திருந்த தமிழீழ விடுதலை இயக்கம் தற்போது சுவிஸிலாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவரை கொழும்பில் தூதரகத்தில் சந்தித்துள்ளது.

சந்திப்பில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கோ. கருணாகரம், வினோ  நோகராதலிங்கம் மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.