நாடாளுமன்றில் உரையாற்ற உரிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை
தங்களுக்கு நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு உரிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தினார்.
அமைச்சுக்களுக்கான ஒதுக்கங்கள் குறித்து கருத்துக்களை முன்வைக்க வேண்டிய சந்தர்ப்பம் தமிழ் உறுப்பினர்களுக்கும் உள்ளது.
இன்றைய விவாதத்தில் உரையாற்றுவதற்கு வடக்கு கிழக்கு மாகாணங்களின் எதிரணி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேரில் ஒருவரின் பெயரும் உள்ளடக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, சார்ள்ஸ் நிர்மலநாதன் முக்கிய பிரச்சினையை எழுப்பி இருப்பதாகவும், ஒரு சமூகத்தை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், அவர்களுக்கு உரிய நேரத்தை ஒதுக்காமல், சஜித் பிரேமதாச ஒரு சமூகத்தையே புறக்கணித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயத்தை தற்போது தீர்க்க முடியாது என்றும் இதுகுறித்து உடனடியாக அவதானம் செலுத்துவதாகவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பதிலளித்தார்.