வெளிநாடுகளிடம் மண்டியிடோம்!! பகிரங்கமாக அறிவித்தது சிறிலங்கா
நாட்டின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் மண்டியிட வேண்டிய அவசியம் சிறிலங்காவிற்கு இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இலங்கை வர்த்தக சபை இன்று ஏற்பாடு செய்த வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“தனியார் வணிக நிறுவனமொன்று அதிக கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, முதிர்வு காலத்தை நீடிப்பதற்கும் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கும் முயற்சிக்கும்.
அத்துடன் வெளிநாட்டுக் கடனைக் குறைப்பதற்கும், உள்நாட்டுக் கடனை அதிகரிப்பதற்கும் கடன் வழங்குபவர்களுடன் குறித்த வணிக நிறுவனத்தால் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
கடன் விடயத்தில் உள்ள பாதிப்புகளை குறைக்க சிறிலங்காவும் அதையே செய்கிறது” என்றார்.
தற்போது நாடு கடன் நிலைத்தன்மைக்கான பாதையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், சிறிலங்காவானது கடன்களை மட்டும் பெற்றுக் கொள்வதில் இருந்து விலகி, கடன் அல்லாத வரவுகளை உருவாக்கும் நோக்கில் நகர்வதாக குறிப்பிட்டுள்ளார்.