ஒரே தள்ளுமுள்ளு!
நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் தொடர்பான சகல தகவல்களையும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று நாடாளுமன்ற அவைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது சட்டையை பிடித்து இழுத்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய மனுஷ நாணயக்கார,கௌரவ சபாநாயகர் அவர்களே நேற்றைய தினம் நேரம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. ஏனைய நாட்களில் வழங்குவது போல் நேரத்தை வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல உங்களிடம் கோரினார்.
நீங்கள் அதனை மதித்து அந்த நேரத்தை எமக்கு வழங்கினீர்கள். நீங்கள் நேரத்தை வழங்கிய பின்னர், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் தாம் அதனை எதிர்ப்பதாக கூறினார்.
இதனையடுத்து நீங்கள் எனது உரையை நிறுத்தினீர்கள். இதனையடுத்து உங்கள் அருகில் பிரதி ஆணையாளருடன் உங்களிடம் வந்தேன். உங்களை நான் அச்சுறுத்தினேனா? நான் உங்களை அச்சுறுத்தவில்லை.
உங்களிடம் நான் கேட்டுக்கொண்டிருந்த போது, உங்களது ஆசனத்தின் பின்பக்கமாக வந்து, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக இருக்கும் அமைச்சர் ஜோன்ஸ்டன் அத்தனை கெட்ட வார்த்தைகளையும் கூறி என்னை திட்டினர்.
எனது மொழியில் அதனை இங்கு கூற விரும்பவில்லை. பல வார்த்தைகளை பயன்படுத்தி என்னை திட்டினார்.
அது மாத்திரமல்ல ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர வந்து என்னை தள்ளினார். கலாநிதி ஹர்ச டி சில்வாவும் படைக்கல சேவிதர்களும் இல்லையென்றால் நான் கீழே விழுந்திருப்பேன்.
நான் சபாநாயகரை சந்தித்து எனக்கு நடந்த அநீதியை கூற முயற்சிக்கும் போது, கெட்டவார்த்தைகளால் திட்டும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஒருவர் இருப்பார் என்றால், இதில் உள்ள யதார்த்தம் என்ன? என மனுஷ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.