தண்டனைக் காலத்தைவிட அதிக காலம் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர் – அருட்தந்தை சக்திவேல்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விட விசாரணை என நீண்ட காலம் சிறையில் இருக்கின்றனர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.இன்று (03.12.2021) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதங்களுக்கிடையில் பகைமையை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆளுநர் அசாத்சாலி அவர்கள் விசாரணை முடிவுற்ற நிலையில் குற்றங்கள் நிரூபிக்கப்படாததன் காரணமாக 8 மாத குறுகிய கால எல்லைக்குள் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ் விடுதலை செயற்பாட்டினை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வரவேற்கின்றது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் இவ்வாறு நிறைவுற சட்டமா அதிபர் திணைக்களமும், நீதிமன்றமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த கதிரவேற்பிள்ளை கபிலன் கைது செய்யப்பட்டு 12 வருடங்கள் கடந்த நிலையில் குற்றம் சுமத்தப்பாடாது இவ்வருடம் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். இது பயங்கரவாத தடை சட்டத்தை கொடூரத்தை உலகுக்கு வெளிக்காட்டியது.
இதேபோன்று இதே சட்டத்தால் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகாலம் விசாரணை என இழுத்தடிப்பு செய்து கொண்டிருப்பதால் கைதிகளும், குடும்ப உறவுகளும் அவர்கள் மீது அக்கறை கொண்டோரும் உளவியல் ரீதியில் சித்திரவதையை அனுபவிக்கின்றனர். இதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் பலர் இறந்தும் உள்ளனர். இதனை இறப்பு என்று கூறுவதைவிட பயங்கரவாத தடைச்சட்டம் மேற்கொண்ட கொலை எனவும் கூறலாம்.
அதுமட்டுமல்ல பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக தன்னுடைய பிள்ளைகளை நீண்டகாலம் காண முடியாமலும், அவர்களுடையடைய எதிர்காலம் தெரியாத நிலையிலும் நோய்குட்பட்ட பல பெற்றோர்கள் இறந்துள்ளனர். சிதைவுற்ற குடும்பங்களும் உள்ளனர். இதற்கான முழுப்பொறுப்பையும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கடந்த 40 வருட காலமாக பாதுகாத்துவரும் அனைத்து ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அதற்கு உடந்தையான எதிர்க்கட்சிகளும் ஏற்றாக வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விட விசாரணை என நீண்ட காலம் சிறையில் இருந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் உரையாடபட்டுள்ளது ஆதலால் இவர்களின் விடுதலை துரிதப் படுத்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல மனித உரிமை பறிக்கும், உயிர்களை பறிக்கும் மனித முகமற்ற கொடிய பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும். அதுவரை இச்சட்டம் அரசியல் நோக்கங்களுக்காக பாவிக்கப்படாதிருப்பதை ஆட்சியாளர் உறுதி செய்தலும் வேண்டும்.
அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்த ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் தலைவர் ஞானசார தேரர் „அரசியல் கைதிகளை ஜனாபதி விடுதலை செய்வதாக என்னிடம் கூறினார் „அது உண்மையெனில் உடனடியாக அதனையும் செய்ய வேண்டும். அரசியல் நோக்கம் கருதி காலம் தாழ்த்தாது ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.