November 28, 2024

கரை ஒதுங்கும் உடலங்கள் யாரது?

யாழ்பாணத்தில் கரை ஒதுங்கிவரும் உடலங்கள் தொடர்பில் மீனவ அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை மேலுமொரு  உடலம்; கரை ஒதுங்கியுள்ளது. இன்று கரை ஒதுங்கிய உடலத்துடன் கடந்த ஒரு வாரத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஜந்து உடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

ஏற்கனவே  மருதங்கேணி கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் உடலம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியிருந்தது.

அதேபோன்று வடமராட்சி கிழக்கு மணல்காடு மற்றும் வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் இரு உடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில்   மேலும் ஒரு உடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது.

அதேநேரம்  நெடுந்தீவிலும் ஓர் உடலம்;  கரை ஒதுங்கியிருந்தது.

கடந்த ஒரு வாரத்தினுள் யாழ் மாவட்டத்தில் கரையொதுங்கிய ஐந்தாவது உடலம் இதுவாகும்.

இந்நிலையில் இலங்கையில் மீனவர்கள் எவரும் காணாமல் போயிருந்தமை தொடர்பில் தகவல்கள் இல்லை.

அதே வேளை இந்திய மீனவர்கள் எவரும் காணாமல் போனமை பற்றி தகவல்கள் இல்லையென யாழிலுள்ள இந்திய துணைதூதர் தம்மிடம் தெரிவித்ததாக மீனவ பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை படகு விபத்து நடந்திருந்தாலும் நெடுந்தீவில் கரை ஒதுங்கியது போன்று வடமராட்சி கடலில் உடலங்கள் கரை ஒதுங்க வாய்ப்பில்லையென மீனவ பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் மாவீரர் தினத்தையண்டி உடலங்கள் கரை ஓதுங்கிவருகின்றமை தொடர்பில் சந்தேககங்கள் எழுப்பப்பட்டுள்ளது.