இன்றும் கேள்விக்குட்பட்டே ஊடக சுதந்திரம்?
இன்றும் கேள்விக்குட்பட்டே ஊடக சுதந்திரம் நாட்டில் உள்ளது. படுகொலைசெய்யப்பட்ட ஊடகர் விடயத்திலேயே நீதி மறுக்கப்படுகின்றபோது என்ன ஜனநாயகம் இருக்கின்றது புர்ந்துகொள்ள முடிவதாக பாராளுமன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வெளிவிவகார மற்றும் ஊடக அமைச்சுக்களுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று வியாழக்கிழமை(25) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தொரிவித்தார்.
நாட்டின் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகத்துறையை பாதுகாப்பதும் ஊடகர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நாடு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாட்டில் போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்பாகவும் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை எதற்குமே நீதி கிட்டவில்லை.
தமிழ் ஊடகத்துறையில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதுபோன்று சுயாதீனமாக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்த சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஊடகவியலாளர்களான நிமலராஜன்(2000);, ஐயாத்துரை நடேசன் (2004);, தர்மரட்னம் சிவராம்(2005);, சுப்பிரமணியம் சுகிர்தராஜன் (2007), செல்வராஜா ரஜீவர்மன் (2007), லசந்த விக்கிரமதுங்க(2009), பரணிரூபசிங்கம் தேவகுமார்(2009) என நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கவென அயராது உழைத்த எத்தனையோ பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதுபோன்று சுப்பிரமணியம் ராமச்சந்திரன், பிரகித் எக்னலிய கொட என எத்தனையோ ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
உதயன் மற்றும் மகாராஜா ஊடக வலையமைப்பு உள்ளிட்ட பல நிறுவனங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறாக ஊடகத்துறை மீதான அடக்கு முறைகளும் ஒடுக்குமுறைகளும் மிலேச்சத்தனமான கருத்துச் சுதந்திர மீறல்களும் இந் நாட்டின் கறை படிந்த வரலாறுகளாகக் காணப்படும் போது இந்த நாட்டில் இவை எவற்றுக்காவது நீதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேட்க விரும்புகின்றோம்.
ஊடக படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு நிச்சயமாக அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடமை காணப்படுகின்றது. ஆனால் தங்களது அரசாங்கத்தின் கடந்த ஆட்சியில் ஏராளமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட போதும் அவை அனைத்தினதும் கோவைகளும் இலாவகமாக முடப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களும் எந்த நீதியும் கிட்டாது தவிக்கின்றனர்.
நான் பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னி மாவட்டத்தில் கணவன் ஊடகத்துறையில் பணியாற்றியதன் காரணமாக குடும்பத்தலைவனை இழந்து பல தாய்மார்கள் வாழ்வாதாரம் கூட இன்றி இன்னல் படுகின்றனர். தங்களது குடும்பத்தினை வாழ்வாதார ரீதியாகக் காப்பாற்ற வேண்டிய கணவனை, தந்தையை இழந்த நிலையில் மெனிகளாக நடைபிணங்களாக அழைகின்றனர். எனவே ஒவ்வொரு இழப்பினையும் சரியாக ஆராய்ந்து நீதியுடன் கூடிய தீர்வுகள் முன்வைக்கப்படவேண்டும்.
அரசாங்கம் இந் வரவு செலவுத்திட்டத்திலே கடந்த ஆட்சியில் பழிவாங்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்களுக்காக நூறு மில்லியன்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்காக சட்டத்திற்குப் புறம்பாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது குடும்பங்களுக்கு நிதியைப் பெற்றக்கொடுத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தினை வழங்கவேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை உணர்ந்து செயற்படவில்லை.
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் வாழ்வாதாரமும் எவ்வாறாக அரசாங்கத்தின் கவனிப்பின்றி காணப்படுகின்றதோ அதுபோன்றே இழப்புக்களைச் சந்தித்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களும் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டணையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை அரசியல் ரீதியில் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. அவ்வாறான நிலைமைகளே பல தசாப்தங்கள் கடந்துள்ள போதும் ஊடகர் படுகொலை விசாரணைகள் கிடப்பில் கிடப்பதற்கான காரணங்கள் ஆகும்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் விடயத்தில், கடந்த நல்லாட்சிக்காலப்பகுதியில் நீதி விசாரணைகளுக்குப் புறம்பாக வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்களது குடும்பங்களுக்கு நலத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டன. பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டில் குழு ஒன்று அமைக்கப்பட்டு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும் நல்லாட்சியில் இடையில் நிலவிய குறுக்கீடுகளும் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பும் அந் நடவடிக்கைகளை நிராகரித்துவிட்டன.
அடிப்படையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நீதி விசாரணையில் தலையீடு இன்றி மேலும் ஓர் செயற்றிட்டமாக வாழ்வாதார இழப்பீடு அளிக்கும் பொறிமுறையை ஏற்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவை அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. அடிப்படையில் நேற்றுக் கூட யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடக அமையத்தினருடன் நான் கலந்துரையாடிய போது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதுவும் சென்றடையவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள்.
ஊடகவியலாளர்களைப் பொருத்தளவில் அவர்கள் மக்களின் நலன்களுக்காக தினமும் உழைப்பவர்கள். அவர்கள் இந்த கொவிட் காலப்பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படையில் சுயாதீன ஊடகவியலாளர்கள் பலர் பல்வேறுபட்ட இடர்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இந்த நிலையில் அரசாங்கம் அவர்களுக்கு சலுகையளிக்க முன்வரவேண்டும்.
வரவு செலவுத்திட்டத்தில் இணைய இணைப்புக்கள் மற்றும் பொதுப்போக்குவரத்தில் கட்டணச்சலுகையளிப்பு போன்றவற்றினை ஏற்படுத்துவது சிறந்ததாகும்.
மேலும் கொழும்பில் தங்கியிருந்து தொழில் புரியும் ஆசிரிய பீட ஊடகவியலாளர்களுக்கு அரசாங்க வீட்டுத்திட்டங்களை ஏற்படுத்துமாறு கோருகின்றேன். பிராந்திய செய்தியாளர்களுக்கு இலகு கொடுப்பனவு மோட்டார் சைக்கிள் திட்டங்களை அமுல்படுத்தவேண்டும். நோய்வாய்ப்படும் ஊடகவியலாளர்களுக்கு விசேடமான காப்புறுதித்திட்டம் ஒன்றை முன்வைக்கக் கோருகின்றேன். இன்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர் தனபாலசிங்கம், சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் போன்றோர் இன்னல் படுகின்றனர். இவர்கள் போன்றவர்கள் நியாயத்திற்காக ஆற்றிய பங்களிப்பை நாம் மனதில் கொள்ள வேண்டியுள்ளது.
மேலும், ஊடகத்தறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படுவது அவசியமாகும். இன்றும் வடக்குக் கிழக்கு ஊடகவியலாளர்கள் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்படுகின்றார்கள். இது அவர்களது கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தையும் தகவல் பெறும் சுதந்திரத்தையும் மீறுவதாகும். கடந்த மாவீரர் தினத்தில் உதயன் பத்திரிகை படம் ஒன்றை வெளியிட்டமைக்காக பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் வழக்கொன்றை எதிர்கொள்ள நேர்ந்தது. இதேவேளை மாவீரர் தின காலப்பகுதியில் ஊடகவியலாளர்களின் தொழில் உரிமையினைப் பறிக்கும் வகையில் பொலிசாரினால் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.
இந் நிலைமைகள் அவர்களது தொழிலைச் சிக்கலுக்குள் தள்ளியள்ளது. எனவே ஊடகத்தறையின் சிறப்பு உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அது இந்த நாட்டில் ஜனநாயகம் ஒரளவுக்கு ஏனும் வாழ்வதற்கு அவசியமானது. இவை குறித்து இந்த பாராளுமன்றம் விசேட கவனம் செலுத்த வேண்டும். பாராளுமன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.