November 22, 2024

புனிதர்கள் திருநாளில் ஒரே நாடு ஒரே சட்டம் சிதறுண்டு சிதைகிறது! பனங்காட்டான்


இலங்கை என்பது தமிழர் தேசம், சிங்களவர் தேசம் என இரண்டாகியுள்ளது என்பதை நாடாளுமன்றம் இந்த மாதம் நேரில் தரிசித்தது. ஒரே நாடு – ஒரே சட்டம் என்பது நடைமுறைக்கு உதவாது என்பதை மாவீரர் நினைவேந்தல் தடையுத்தரவு தீர்ப்புகள் ஊடாக நீதிமன்றங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இது என்ன நாடோ? என்ன சட்டமோ? 
வன்னியின் அடர்ந்த காட்டுப்பகுதியில், இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை சூழ்ந்து நிற்கையில், 1989 நவம்பர் 27ம் நாளன்று மாவீரர் நாள் பிரகடனமானது.

2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போர் உறைநிலை கண்டதாயினும், தமிழரின் நீண்டகால அபிலாசைகளுக்கான அரசியல் போராட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதுபோல், உலகளாவிய ரீதியில் மாவீரர் நாள் நினைவெழுச்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

கார்த்திகை என்றால் அது மாவீரர் மாதம். காந்தள் பூ என்னும் கார்த்திகைப்பூ மாவீரர் அடையாளம். விடுதலைப் போரின் வெற்றிவாகையாக கார்த்திகை பூஜிக்கப்படுகிறது.

ஆனால், விடுதலைப் போரில் ஆகுதியானவர்களையும் மண்ணோடு மண்ணான அப்பாவிப் பொதுமக்களையும் நினைவேந்தி தீபமேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்த ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் சிங்கள தேசம் அஞ்சுகிறது. அதற்காக தடைகளை விதிக்கிறது.

போரில் மரணித்த சிங்களப் படையினரை போர் வீரர்களாக உருவகப்படுத்தி அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது அவர்களின் அரசு. தமிழர் தாயகத்தில் இறந்த இந்தியப் படையினருக்கு இலங்கை மண்ணில் தூபி அமைத்து இரு நாட்டு அரசுகளும் மரியாதை செலுத்துகின்றன. ஆனால் அதே உரிமை தமிழருக்கு மறுக்கப்படுகிறது.

சோசலிச ஜனநாயக ராணுவ ஆட்சி நடத்தும் ராஜபக்ச சகோதரர்கள் எதேச்சாதிகாரப் போக்கில் தொடர்ந்து தடைகளை விதித்து, அதனை மீறுபவர்களென பலரை கைது செய்து அடைத்து, தடைகளை உடைக்கும் பலத்தை தமிழ் மக்களிடையே வேகம் கொள்ளச் செய்கிறது.

எதிர்கொள்ளாமல் எதனையும் அடைய முடியாது என்ற சிந்தனைக் கோட்பாடே தமிழரின் இன்றைய வழிகாட்டி. உரிமை என்பது இரந்து பெறுவதல்ல, பிறப்பால் வந்ததை இழக்காது காப்பதே என்பது தமிழரின் சித்தாந்தம். இதற்கு ஆயுதம் தேவையில்லை. உணர்வின் உறுதிப்பாட்டை அச்சமின்றி வெளிப்படுத்துவதே இதற்கான ஆயுதம்.

மாவீரர்களை விதைத்த மண்ணில் எழுப்பப்பட்ட துயிலும் இல்லங்களை இடித்துத் தரைமட்டமாக்கிய சிங்களப் படையினர், அதே கற்களால் அதே நிலத்தில் தங்களுக்கான முகாம்களை அமைத்து அந்த மண்ணைக் கபளீகரம் செய்கிறார்கள் என்பதன் பெயரே அராஜகம்.

ஜெனிவா மனித உரிமைப் பேரவை ஆணையாளர் 46:1 தீர்மான வரைபிலும், கடந்த செப்டம்பர் மாத வாய்மூல அறிக்கையிலும் இதனைக் குறிப்பிடத் தவறவில்லை. போரில் மரணித்தவர்களை நினைவுகூர மறுப்பதை தமது அறிக்கையில் தமக்கேயுரிய பாணியில் அவர் சுட்டியிருந்தார்.

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட 2021ம் ஆண்டின் முதற் பருவகால அறிக்கையில் இதனை விளக்கியுள்ளது.

‚நினைவுகூரல் நிகழ்வுகளை – குறிப்பாக வடக்கு கிழக்கு சமூகங்களுக்கிடையே செய்யவிடாமல் தடுப்பதன் மூலம் சிறுபான்மைக் குழுமங்களை பிரித்தொதுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடருகின்றது“ என்று இந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. இது மாவீரர் நினைவுநாள் வணக்க நினைவுகளை மட்டும் குறிப்பிடவில்லை. தியாகி திலீபன் நினைவுநாள், கறுப்பு யூலை, இனவழிப்பு நாட்கள் போன்ற அனைத்தும் இதற்குள் அடக்கம்.

இந்த வருட மாவீரர் மாதத்தில் முக்கியமாகக் குறிப்பிடக்கூடியதாக கொழும்பு நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற உரையொன்றைச் சொல்லலாம். ஈ.பி.டி.பி.யின் தலைவரும், கோதபாய அரசின் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பாதீடு விவாதத்தில் உரையாற்றுகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை போதைப்பொருள் வியாபாரியென்று கூறியதையொட்டி இடம்பெற்ற விவாதம் இது.

அமைச்சரின் உரைக்கு பதிலடியாக அதிமுக்கியமான ஒரு கருத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா தமதுரையில் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளின் தலைவரின் நல்லொழுக்கம், நேர்த்தியான வாழ்வியல் பற்றி இலங்கை ராணுவத்தின் தளபதிகளான சரத் பொன்சேக, கமால் குணரட்ன ஆகியோர் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்துரைத்ததை மேற்கோள் காட்டிய கஜேந்திரன், தேசியத் தலைவரை கேவலப்படுத்தும் வகையில் டக்ளஸ் தேவானந்தா உரை அமைந்தது விந்தையாக உள்ளதென குறிப்பிட்டவேளை – இது தமிழர் தேசம், தேசியத் தலைவர் பிரபாகரன் – என்று அழுத்திக் கூறியபோது அரசாங்க தரப்பினர் வெகுண்டெழுந்தனர்.

கஜேந்திரனின் சொல்லாடலைக் கேட்டு முதலில் கொதித்தெழுந்தவர் ராஜாங்க அமைச்சரான சீதா அரம்பொல என்ற பெண் உறுப்பினர். கஜேந்திரனின் சொல்லாடலை நாடாளுமன்ற அதிகார அறிக்கையிலிருந்து நீக்குமாறு ஒழுங்குப் பிரச்சனை கிளப்பியதோடு, இது சிங்கள தேசம் என்ற இவரது குரலுக்கு அரச தரப்பிலிருந்து பலரும் கோரஸ் பாடினர்.

அதிகார அறிக்கையில் தமிழர் தேசம், தேசியத் தலைவர் பிரபாகரன் என்பது இடம்பெறுமா அல்லது நீக்கப்படுமா என்பதற்கும் அப்பால், இலங்கை நாட்டில் இரண்டு தேசங்கள் உண்டு என்பதும், தமிழர் தேசத்தின் தலைவர் பிரபாகரன் என்பதும் நாடாளுமன்ற விவாதத்தினூடாக பதிவு பெற்றுள்ளது. இந்த வரலாற்றுப் பதிவை இடம்பெற வழியமைத்துக் கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமிழினம் நன்றி கூற வேண்டும்.

தமிழர் தேசத்தின்மீது படையெடுத்து தோல்வியுடன் தாயகம் திரும்பிய இந்தியப் படை அதிகாரிகள் கல்கட், பாண்டே மற்றும் யுத்த வெறியரான இந்தியத் தூதுவராகவிருந்த டிக்சிற் போன்றோர் எழுதிய யுத்தகால நினைவு பதிவு நூல்களில்கூட மேதகு அவர்களின் ஒழுக்கத்தையும், விடுதலைப்பற்றையும், படை நடத்தலையும் பாராட்டத் தவறவில்லை.

கடந்த ஆண்டுகளைப் போலல்லாது இந்த வருடம் சிங்கள தேசம் மாவீரர் வார நினைவேந்தலை தடுக்கும் முயற்சிகளை முற்கூட்டியே ஆரம்பித்தது. மாவீரர் துயிலும் இல்லப் பகுதிகள் படையினரால் முடக்கப்பட்டன. இருப்பினும் வீதிக் கரையோரங்களை தொண்டர்கள் சிரமதானம் மூலம் துப்பரவு செய்தபோது படையினர் அச்சுறுத்தினர்.

தொடர்ச்சியாகப் பல நீதிமன்றங்களில் தடையுத்தரவுக்கு மனுக்கள் தாக்கல் செய்த பொலிசார், அந்தத் தடை ஆணைகளை தபாற்காரர்போல வீடு வீடாகச் சென்று விநியோகித்து தங்கள் தரத்தை இறக்கிக் கொண்டனர். வடக்கு கிழக்கிலுள்ள மாகாணங்களின் நீதிமன்றங்களில் கடந்த பல நாட்களாக வழமையான வழக்கு விசாரணைகளுக்குப் பதிலாக மாவீரர் நினைவு தடை மனுக்களுக்கான விசாரணைகளே இடம்பெற்றன.

நீதிமன்றத் தடை மனுக்களில் சில குறிப்பிட்டவர்களின் பெயர்களுக்கே உத்தரவு பெறப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் செல்வராஜா, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் அநேகமாக சகல நீதிமன்றங்களின் தடையிலும் இடம்பெற்றன. கிளிநொச்சி நீதிமன்றத் தடையில் மட்டும் கூட்டமைப்பின் சிவஞானம் சிறீதரனின் பெயர் இடம்பெற்றிருந்தது. வடக்கின் மற்றைய எம்.பிக்களுக்கோ முன்னாள் எம்.பிக்களுக்கோ தடை கோரப்படவில்லை. கடந்த வருடம் மாவீரர் பண்டிதரின் வீட்டுக்குச் சென்று தீபமேற்றிய சுமந்திரனின் பெயர்கூட இதுவரை இடம்பெறவில்லை.

வடக்கிலுள்ள கூட்டமைப்பின் எம்.பிக்கள் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்குபற்ற மாட்டார்கள் என்பதை அறிந்தே இவ்வாறு செயற்பட்டது போன்று தெரிகிறது.

மாவீரர் நினைவுதினத்துக்கு தடை விதிக்கும் விடயத்தில் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள நீதிமன்றங்கள் நடந்து கொண்டவிதம் விசித்திரமானது. சில நீதிமன்றங்கள் கண்களை மூடிக்கொண்டு தடை விதிக்க, வேறு சில காரணம் கூறி தடையை நிராகரித்துள்ளன.

யாழ்ப்பாணம், மல்லாகம், பருத்தித்துறை, ஊர்காவற்துறை, மன்னார் நீதிமன்றங்கள் தடையுத்தரவை வழங்கவில்லை. நாட்டின் சட்டங்களை இயக்குபவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால் அவர்கள் சட்டங்களை மீற மாட்டார்கள். ஆனால், அவர்கள் மீறினால் பின்னர் நடவடிக்கை எடுக்கலாமென்று சில நீதிமன்றங்கள் காரணம் கூறியுள்ளன.

ஏற்கனவே தடையுத்தரவு பிறப்பித்த முல்லைத்தீவு நீதிமன்றம், மீளாய்வு மனு விசாரணையின் பின்னர், தடை செய்யப்பட்ட அமைப்பின் அடையாளங்களை வெளிப்படுத்தாது நினைவேந்தலை நடத்தலாமென அனுமதி வழங்கி பொலிசாரை சலிப்படைய வைத்துள்ளது.

யாழ்ப்பாண நீதிமன்றில் அதன் பதில் நீதிபதியாக கடமையாற்றுபவர் முன்னர் வழங்கிய தடையுத்தரவை மறுபரிசீலனை செய்ய மறுத்து, வேண்டுமானால் மேல்நீதிமன்றத்துக்குச் சென்று விண்ணப்பம் செய்யலாமென தீர்ப்பளித்துள்ளார்.

என்ன சட்டம்? என்ன நீதி? யார் நீதிவான்? சட்டத்தை உய்த்துணர்ந்துதான் தடை விதிக்கப்படுகிறதா? அல்லது அரசியல் மயப்படுத்தப்பட்ட தீர்ப்பா? ஒரே நாடு – ஒரே சட்டம் எவ்வாறு அமலாகிறது?

சிங்கள நீதிபரிபாலனத்தை மாவீரர்களின் தியாகம் சிதறடிப்பதை வரலாறு பதிவு செய்து கொண்டிருக்கிறது. இது போராட்டத்தின் இன்னொரு வடிவம்.