November 22, 2024

சாரா: புலனாய்வு பிரிவின் பின்னணியில் கொல்லப்பட்டார்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சாட்சியாகக் கருதப்படும், தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் மனைவியான சாரா என்பவர் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தயங்குவது ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. மனுச நாணயக்கார கேள்வியெழுப்பினார்.

சாரா என்பவர் இராணுவ முகாமில் இருக்கின்றாரா? இல்லையென்றால் அவர் கொல்லப்பட்டு விட்டாரா? அதுவும் இல்லை என்றால் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல விடப்பட்டாரா என்பது தொடர்பில் அதிகாரிகள் தகவல்களை வெளியிட வேண்டும் என்று மனுச நாணயக்கார எம்.பி.கோரினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அன்று தனது தந்தை கூறினார் என்று தாக்குதல் நடந்த மறு நாள் 22ஆம் திகதி ஹரீன் பெர்னாண்டோ கூறியிருந்தார்.

படுக்கையில் இருந்த தனது தந்தை அது தொடர்பில் அறிந்திருந்தார் என்றால் பொலிஸார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எவ்வாறு அறியாது இருந்திருப்பர் என்று ஹரீன் பெர்னாண்டோ அன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்தே அது தொடர்பான விடயங்கள் விரிவாகின. இல்லாவிட்டால் குண்டு வெடிப்பதற்கு முன்னர் பொலிஸார் இருவர் கொல்லப்பட்ட போது, விடுதலைப் புலிகளின் தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டது என்றும் வீட்டில் ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறி விடுதலைப் புலிகளின் கணக்கில் போட்டனர். இது குண்டு வெடிப்புக்கு முன்னர் செய்யப்பட்ட ஒன்றே.

அன்று ஹரீன் பெர்னாண்டோ இந்தக் கதையை கூறியிருக்காவிட்டால் இதனை விடுதலைப் புலிகளின் மீது சுமத்தி இதனை மூடி மறைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

வனாத்தவில்லுவில் கண்டுபிடிக்கப்பட்ட ரி 56 ரக துப்பாக்கியின் இலக்கமும் அழிக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி திட்டமிட்ட நடவடிக்கை என்றே தெரியவருகின்றது. சி.ஐ.டி.யினர் அந்த பொலிஸ் அதிகாரிகளின் கொலையுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்போது பேராயர் அடிக்கடி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கேள்விகளை எழுப்பும் போதும் அதற்கு பதிலளிக்கப்படுவதில்லை. சாரா எங்கே என்று கேட்கும் போது அதற்குப் பதிலளிக்கப்படுவதில்லை. சாரா இராணுவ முகாமில் இருக்கின்றாரா? கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது இந்தியாவுக்கு தப்பிச் செல்ல இடமளிக்கப்பட்டுள்ளரா? என்பதை சமூகத்துக்கு வெளியிடுங்கள்.

இது தொடர்பில் கூறும் போது கைது செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர். அதனைச் செய்யாது இது தொடர்பில் பதிலைக் கூறுங்கள். ஏன் இதனை கூறுவதற்குப் பயம்? அன்று கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடன் கூடிய வாகனம் உயர் பொலிஸ் அதிகாரியொருவரின் ஊடாக விடுவிக்கப்படும் போது இலஞ்சம் வாங்கியவர்கள் யார்? அந்த லொறிகளின் உரிமையாளர்கள் யார்? குறித்த பொலிஸ் உயர் அதிகாரி மாலு மாலு ஹோட்டலில் இருக்கும் போது அதற்கான கட்டணத்தை செலுத்தியவர்கள் யார்? அவர் இந்த அரசாங்கத்தில் என்ன பதவியில் இருக்கின்றார். அது தொடர்பான வழக்குகளுக்கு என்ன நடந்தது. இது தொடர்பாக கேள்விகள் எழுகின்றன.

சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலத்திலுள்ள தகவல்களை வெளியிடாது இருப்பது ஏன்? வீட்டில் சந்தித்த புலனாய்வு அதிகாரி யார்? ஏன் இதுபற்றிக் கூறும் போது எங்களை விரட்டுகின்றீர்கள். ஏன் சிறில் காமினி குருவானவரை கைது செய்ய முயற்சிக்கின்றனர். மூடி மறைக்க முயன்றவை வெளியில் வருவதாலேயே இப்போது அஞ்சுகின்றனர் என்றார்.