தலையில் அடிக்கப்படும் ஆணி: இந்தியாவிற்கு ஏற்பட்ட படுதோல்வி
இந்திய – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள், ராஜீவ் காந்தி டெல்லிக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்பி வைக்கும் வகையில், அரச தலைவர் ஜெயவர்த்தனாவின் மாளிகையில் இலங்கை கடற்படை அணி வகுப்பு நடந்தது. அந்த அணி வகுப்பு மரியாதையை ராஜீவ் காந்தி ஏற்க சென்றார்.
முதல் வரிசையில் நின்ற வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுவிட்டு திரும்ப முயன்றார். அப்போது இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவர் திடீரென்று பாய்ந்து வந்து, தனது துப்பாக்கியை திருப்பி, துப்பாக்கிக் கட்டையால் ராஜீவ் காந்தியை தாக்கினார்; துப்பாக்கிக் கட்டை, ராஜீவ் காந்தியின் இடது தோளில் பட்டு தரையில் விழுந்தது.
அதிர்ச்சியில் உறைந்துபோன ராஜீவ் கொஞ்சம் முன்னே வேகமாக நடந்து சென்று திரும்பி பார்த்தார். இதற்குள், ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்குச் சென்ற அதிகாரிகள் பாய்ந்து சென்று, துப்பாக்கியால் தாக்கிய சிப்பாயை கீழே தள்ளினார்கள் இவ்வாறு ராஜீவ் காந்தியை தாக்கியவரின்; பெயர் விஜித ரோதன. அவரிடம் ராஜீவை ஏன் தாக்கினீர்கள் என்பதற்கு விஜித ரோதன சொன்ன பதில் இதுதான்.
சிங்களவர்களை அச்சுறுத்தும் சட்டம்
‚இன்றைக்கு நான் அந்நியனான ராஜீவுக்கு மரியாதை செலுத்த வேண்டும். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் பிரபாகரனுக்கு மரியாதை செலுத்த வேண்டிய நிலை வரும்‘. இந்த எண்ணத்தை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்திருக்கும் 13 ஆம் திருத்த சட்டத்தின் முக்கிய சரத்துக்கள் கீழ்வருபவைதான்.
இலங்கை பல மொழிகளையும், பல இனங்களையும் கொண்ட பன்முகச் சமூகம் என ஏற்றுக் கொள்ளல், அனைத்து இனக்குழுமங்களையும் பேணிப்பாதுகாக்க வேண்டிய, குறிப்பாக கலாசார மொழி அடையாளம் உண்டென்பதை அங்கீகரித்தல்,வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழும் பிரதேசம் என ஏற்றுக் கொள்ளளல், வடக்கு கிழக்கு மாகாணத்தை ஒன்றிணைத்து ஒரு நிர்வாக மாவட்டமாக்குதல்.
தேவைப்படும் போது பொதுசன வாக்கெடுப்பை நடத்தி இரண்டு மாகாணமாகப் பிரித்தல் என்பவையே 13ஆம் திருத்தத்தின் பிரதான சரத்துக்கள். இந்த முன்வைப்புக்கள் இலங்கைத் தீவில் தமிழர் விரோதப்போக்கு அதிகரிக்கவும், சிங்களவர்கள் இந்தியா மீதுகொண்டிருக்கும் பயவுணர்வை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவும் பிரதான காரணியாக இருந்துவருகின்றன.
சட்டம் சொன்ன எதுவும் இல்லை ஆனால், 13 ஆம் திருத்தம் குறிப்பிடும் முக்கிய விடயங்களில் எந்த அம்சமும் இலங்கையில் இப்போது இல்லை. அனைத்தும் திட்டமிட்டே அழிக்கப்பட்டுவிட்டன. வலுவிழக்கச்செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு மதிப்பு தரவல்ல நிர்வாக நடைமுறைகளைக் காண்பதரிது. சிங்கள மொழிக்கும், பௌத்த கலாசாரத்துக்குமே முதுன்மையளிக்கப்பட்டு வருவதை யாதார்த்த வாழ்வில் அவதானிக்கமுடியும்.
வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீக பிராந்தியம் என்பதை ஏற்கும் மனநிலையில் எந்த சிங்கள அரசியல் வாதியும் இல்லை. சிங்கள மக்களும் இல்லை. கடந்த மாகாண சபையின் ஆட்சியின்போது சுயாதீனமாக செயற்படவல்ல ஒரு நிதியத்தைக்கூட அமைக்கமுடியாதளவுக்கு முதலமைச்சர் திணறினார். காணி அதிகாரமோ, பொலிஸ் அதிகாரமோ வாய்ப்பேச்சில்கூட நடைமுறையில் இல்லை.
மாகாணங்களின் நிர்வாக விடயங்களில் தலையிடும் உச்சபட்ச அதிகாரத்தை அரச அதிபரின் விருப்பத்தெரிவான ஆளுநரே கொண்டிருக்கிறார். எனவே மாகாண சபை முறையே தோல்வி கண்டுவிட்டது. இந்நிலையில் இந்தியாவும், அத்தேச நலன்களுக்கு சிறு கீறல்விழாது காப்பாற்றப்போராடும் ஈழத் தமிழ் தேசிய அரசியல் தரப்புக்களும் 13 திருத்த சட்டத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பது ஏன்?
இந்தியாவின் அரசியலே 13
இலங்கைத் தீவில் தனது பிடி எப்போதெல்லாம் கைநழுவிப் போகுமளவிற்கான சூழல் உருவாகிறதோ, அப்பொழுதெல்லாம் 13 ஆம் திருத்தம் மீதான அக்கறையை – அழுத்தத்தை இந்தியா வெளிப்படுத்திவருவதை அவதானிக்கலாம். இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இத்தகைய அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இறுதிப் போர் 2009 ஆம் ஆண்டில் முடிவுற்றவுடன், இத்தீவின் புவிசார் அரசியலை மையப்படுத்தி சீனா – அமெரிக்கா – இந்தியா நாடுகளிடையே ஏற்பட்ட அரசியல் போட்டியின் போது 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என இந்தியா விடாப்பிடி பிடித்தது. இந்தப் பிடிவாதத்தில் கொதித்தெழுந்த சிங்கள கடுந்தேசியவாத கட்சிகள், அமைப்புகள் இணைந்து நடத்திய போராட்டங்கள், இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தனித்தனியாகப் பிரிப்பதற்கு வழிகோலின.
இது இந்தியாவுக்கு ஏற்பட்ட இரண்டாவது பெருந்தோல்வி. 13 ஐ மையப்படுத்திய இரண்டாவது அழுத்தம் 2013, 2014 ஆம் ஆண்டுகளில் கொடுக்கப்பட்டது. சீனாவின் ஆதிக்கம் கொழும்பு, ஹம்பாந்தோட்டை என நிரந்தரமாக விஸ்தரிக்கப்பட்ட ஆண்டுகள் அவை. அந்த அழுத்தத்திற்கும் அப்போது ஆட்சியிலிருந்த ராஜபக்சக்கள் அடிபணியாமையினால் ஆட்சிமாற்றமே நிகழ்த்தப்பட்டது.
இருந்ததையும் களவாடிய நல்லாட்சி
2015 இல் இந்தியா – அமெரிக்க நலன்களுக்குத் துணைபோகும் நல்லாட்சி உருவாக்கப்பட்டது. 13 ப்ளஸ் அளவிற்குத் தீர்வு விடயங்கள் பேசப்பட்டன. ஆனால் களத்தில், 13 ஆம் திருத்த்தை மேலும் வலுவிழக்கச்செய்யும் ஆட்சியாகவே நல்லாட்சியும் மாறியது. வடக்கில் அமைந்திருந்த இந்தியாவுக்கு ஆதரவான தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை ஒரு புள்ளியளவுக்குக் கூட நகரமுடியாதளவுக்கு இருந்தது.
முதலமைச்சருடன் ‚கோவிச்சிக்கொண்ட‘ உறுப்பினர்கள் நேரடியாகவே ஆளுநரிடம் முறையிடும் நிலையில் அதிகாரம் கோலோச்சியிருந்தது. போரில் அழிவுண்டிருந்த வடக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் நோக்குடன் நிதியம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியிருந்த முதலமைச்சர் அதில் பெருந்தோல்வியையே சந்தித்தார்.
தொழில் பிணக்குகள், காணிப் பிணக்குகள் கிடப்பிலேயே கிடந்தன. வடக்கின் பண்பாட்டம்சங்களை மாற்றும் நோக்குடன் 1000 பௌத்த மையங்கள் அமைக்க முயற்சிகள் நடந்தன. இந்தக் காலப் பகுதியில் மத்திய அரசின் கீழிருந்த காவல்துறையினர் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரைச் சுட்டுக்கொன்றனர். அவ்வேளையில் ஆறுதலுக்காகக் கூட மாகாண காவல்துறை அதிகாரத்தின் தேவைகள் குறித்து இந்தியாவோ, தமிழ் தேசிய தரப்புக்களோ வாய்திறக்கவில்லை.
இந்தியாவுக்கு ஏற்பட்ட கிலி
2020 ஆம் ஆண்டில் மீளவும் ஆட்சி ராஜபக்சக்களின் கைக்கு மாறிவிட்டது. என்றுமில்லாத வகையில் சீன ஆதிக்கம் இலங்கை தீவில் ஏற்பட்டிருக்கிறது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைக் கூட இந்தியாவுக்கு வழங்க முடியவில்லை. ஆனால் இலங்கையின் வரைபடத்தையே மாற்றுமளவுக்கு துறைமுகநகரமொன்றை கொழும்பில் சீனா அமைத்துவிட்டது.
அதற்கு சட்ட ரீதியான அந்தஸ்த்தை தரவல்ல நாடாளுமன்ற ஆணையையும் சீனா பெற்றுவிட்டது. அதுமட்டுமல்லாது இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு அவற்றைக் கட்டுப்படுத்துமளவுக்கு சீனாவின் அதிகாரத் தலையீடு நடந்திருக்கிறது.
இவ்வாறாக இலங்கையின் தென்பகுதி சீனாவினது ஆதிக்கத்திற்குப் போனாலும், நமக்குத்தான் வடக்கு, கிழக்கு பகுதிகள் உள்ளனவே, பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்த இந்தியாவுக்கு, வடக்கு மாகாணத்தின் தீவுக்கூட்டங்களும் சீனாவுக்கு வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்ற செய்தி கிலியை ஏற்படுத்தியது.
அதன்பிறகுதான் மீண்டும் 13 ஆம் திருத்தம் பற்றிய பேச்சு 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மூன்றாம் தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 ஆம் திருத்தத்தை ஆதரித்துவந்த தமிழரசு கட்சி தவிர ஏனைய கட்சிகளை இந்தியா ஒருங்கிணைத்திருக்கிறது.
கூழ்முட்டைத்தனமான அரசியல்
இந்தக் கட்சியினர் அனைவரும் ஒன்றாக இணைந்து, இலங்கை இனப்பிரச்சினை தீர்வின் தொடக்கப் புள்ளியாகப் 13 ஐ கொள்ளுங்கள் என சர்வதேசத்திடம் – இந்தியாவிடம் – இலங்கையிடம் மன்றாடுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
கால மாற்றத்தையும், இலங்கையில் உருவாகியிருக்கும் இனவொடுக்குமுறையின் புதிய வடிவங்களையும் நுணுக்கமாக ஆராயாத – அறிய முற்படாத கட்சிகளின் கூழ்முட்டைத்தனமான அரசியல்தான் 13 இற்காகக் குரல்கொடுக்கும் இந்த நிலமை. மானுட மாண்புகளை அதிகம் மதிக்கும் நகரொன்றில் இலங்கை தூதரக அதிகாரி, புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் எனச் சைகைக் காட்டியதைத் தமது நகரங்களில், கிராமங்களின் பிரம்மாண்ட வர்ணமாக வரைந்து வழிபடும் நிலைக்கு இந்நாடு இனவாத வேர்பரப்பியிருக்கின்றது.
பகுத்தாராய்ந்து பட்டம்பெற்று பெரும் பதவிகளில் இருக்கும் பெரும்பான்மையினரே, வடக்கு, கிழக்கில் பௌத்தமே இருந்தது. எனவே புத்தர் சிலைகளை அரச மரங்கள் காணுமிடமெல்லாம் நடவேண்டும் எனப் பொதுவெளியில் எழுதும் நிலைக்கு நாடு ஓரினமையச் சிந்தனையில் மூழ்கிவிட்டது. இந்நிலையில் 13 ஆம் திருத்தத்தில் சொல்லப்படும் எந்த விடயத்தைத்தான் இங்கு நடைமுறைப்படுத்தவியலும்?
ஒரேநாடு ஒரேசட்டம்
இவ்வாறு 13 ஐ கோரும் அணி வடக்கில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமநேரத்திலேயே தெற்கில் ஒரே நாடு ஒரே சட்டம் அரச தலைவர் செயலணி உருவாக்கப்பட்டுவிட்டது. சிங்கள பௌத்த கடுந்தேசியவாதிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் குழுவில் தமிழர்களை இணைத்துக்கொள்ளுங்கள் என பெரும் மன்றாட்டமே நடத்தவேண்டியிருந்தது.
நிலமைய இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கு தமிழர்களின் பண்பாட்டு வாழிடம் என்று யாரிடம் கோருவது? யாருக்கு அழுத்தம் பிரயோகிப்பது? ஒரே நாடு ஒரே சட்டம் அரச தலைவர் செயலணி சரியாக செயற்படுமானால், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளில் 13 ஆம் திருத்தத்தை நீக்கவேண்டும் என்பதையே முன்வைப்பார்கள்.
13 ஆம் திருத்தம் என்பது இந்தியாவினால், இலங்கைத்தீவை இரண்டாகப் பிரிப்பதற்கு முன்வைக்கப்பட்ட சட்டத்திருத்தம் என்ற வாதம் அனேக பெரும்பான்மையினர் மத்தியில் உண்டு.
எனவே அதன்படி அவர்கள் இயங்குவார்களாயின் இன்னும் சிலவருடங்களில் 13 ஐ முற்றாக நீக்கும் நிலையே ஏற்படும். இவ்வாறான நடைமுறையை விளங்கிக்கொள்ளாது இன்னமும் தரவேற்றம் செய்யப்படாத சட்டத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது, தனது நலன்களைக் காப்பாற்ற நினைக்கும் இந்தியாவுக்கு நன்மையளிக்கலாம். தமிழர்களுக்கு?
தலையில் அடிக்கப்படும் ஆணி
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது மலையகம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களும் முன்னெப்போதும் இல்லாதளவுக்குப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். 13 ஆம் திருத்தம் பற்றி அறைகளுக்குள் உரையாடிக்கொண்டிருக்கும் சமநேரத்தில், அறைகளுக்கு வெளியே நில அபகரிப்புக்கு எதிராகத் தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
இறுதிப் போரின்போது சரணடைந்து – கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்னவானது எனச் சொல்லுங்கள் எனக்கோரிப் போராட்டம் நடத்தும் மக்கள் தெருவில் இறந்து கிடக்கின்றர். வடக்கு, கிழக்கின் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான குடியேற்றங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் மதவாச்சியிலிருக்கும் சிங்கள மக்களை இணைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. பௌத்த சாயலுடைய தொல்லியல் எச்சங்கள் காணுமிடமெல்லாம் பல்பரிமாண ஆய்வு நோக்கற்று பௌத்த விகாரைகளைப் புதிதாக அமைக்கும் வேலைத்திட்டங்கள் விரிவுபெற்று வருகின்றன.
இவைதான் இன்று தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைகள் தமிழர்களின் இருப்பையே அழிக்கும் வகையிலானவை. இவை பற்றி எதையும் சொல்லாத – இதற்கொரு தீர்வைத் தராத 13 ஆம் திருத்தம் தமிழர்களின் தலையில் அடிக்கப்படும் ஆணி.
– ஜெரா –