தலைமை நேசித்த அமரர் ம.வ.கானமயில்நாதன்!
ஈழ விடுதலைப்போராட்டத்தின் சத்தமற்ற ஊடக சாட்சியங்களுள் ஒன்றாக இருந்து மறைந்த மூத்த ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் அவர்களிற்கு யாழ்.ஊடக அமையம் தனது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்வதாக இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஊடக பரப்பில் உரிமை கோரப்படாத மரணங்களும் காணாமல் ஆக்கப்படுதல்களும் அச்சுறுத்தல்களும் நிரம்பி வழிந்த யாழ்ப்பாண மண்ணில் சோரம்போகாது தனது ஊடகப்பணியினை உதயன் நாளிதழில் அதன் பிரதம ஆசிரியராக இருந்து ஆற்றியவர் ம.வ.கானமயில்நாதன்.
அச்சுறுத்தல்களால் அடிபணிய வைக்கலாமென்று பலரும் எதிர்பார்த்திருந்த போதும் தனது ஒற்றை பேனாவின் முனையை நம்பி கொலை வாளின் கீழாக ஊடகப்பணியாற்றியவர் ம.வ.கானமயில்நாதன்.
தமிழ் தேசிய விடுதலைப்போராட்ட பரப்பில் ஊடக பங்களிப்பு பற்றிய பதிவுகளில்; என்றுமே விலக்கப்படமுடியாத சக்திகளுள் ஒருவராக அவர் இருந்து வந்திருந்தார்.
அவரது ஊடகப்பள்ளியில் புடம் போடப்பட்ட நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் உலகெங்கும் நிரம்பிப்போயுள்ளனர்.
2005இன் பிற்பகுதியில் ஜனநாயகம் பேசுகின்ற துப்பாக்கிதாரர்களது கொலை கரங்களில் இருந்து தப்பிக்க அவர் வருடக்கணக்கில் தனது அலுவலகத்தினுள்ளேயே முடங்கிக்கிடந்தமையும் நாள் தோறும் உதயன் நாளிதழை வெளிக்கொணர்ந்தமையுமான வரலாறுகள் இளம் ஊடக சமூகம் கற்றுக்கொள்ளவேண்டியதொன்று.
உதயனில் வெளிவந்த ஆசிரிய தலையங்களை வாசித்தே இதனை கானத்தார் தான் எழுதியதாக அடித்துச்சொன்ன தமிழீழ தேசிய தலைமை பற்றி அவருக்கு என்றுமே பெருமையும் புளங்காகிதமமுண்டு.
உதயன் பத்திரிகை 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலான 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியுள்ளமை ஒரு வரலாற்று பதிவே.
நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ஊடகப்பணியாற்றிய மிக சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுக்குள் கானமயில்நாதனும் ஒருவர்;.
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதியன்று எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் விழாவில் , விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதேவேளை ஊடகத்துறையில் தேசியம் சார்ந்து நெருக்கடியாக சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியமைக்காக கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி யாழ்.ஊடக அமையத்தினால் அவர் வாழும் போதே கௌரவிக்கப்பட்டமையினை பெருமையுடன் நினைவுகூர்கின்றோம்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் பிரிவால் துயருற்றிருக்கின்ற குடும்பத்தவர்களிற்கு ஆறுதலையும் யாழ்.ஊடக அமையம் தெரிவித்து நிற்கின்றதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.