November 22, 2024

மாவீரர் தினத்தை மாற்றும்படி கோரிய தகவல் திரிபுபடுத்தப்பட்டது!

எதிர்வரும் 20 ஆம் திகதியை, இறந்தவர்களுக்காக மன்றாடும் சிறப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதேயன்றி மாவீரர் தினத்தை மாற்றும்படி கோரியதான தகவல் திரிபுபடுத்தப்பட்டதென வட கிழக்கு ஆயர் மன்றம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம் 20 ஆம் திகதியை, இறந்தவர்களுக்காக மன்றாடும் சிறப்பு நாளாக, வட கிழக்கு ஆயர் மன்றம் விடுத்த அறிக்கை தொடர்பாக, பல வாதங்களும் பிரதி வாதங்களும் விமரிசனங்களும் அறிக்கைகளும் கண்டனங்களும், ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அறிக்கையை முழுமையாகப் படிக்காமலும் தெளிவாகப் புரியாமலும், இவை நடக்கின்றன என்றே நம்புகிறோம்.

அறிக்கையில், மாவீரர் தினத்தை மாற்றும்படி எங்கும் கோரப்படவில்லை.

மாவீரர் தினம் வேறு தினம்.இது வேறு தினம்.

மேலும், இங்கு தமிழர் தினம் என்றோ தமிழ் தேசியம் என்றோ போராளிகள் என்றோ எதுவும் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

இங்கு இறந்த அனைவர் தினம் என்னும் போது, இலங்கை மண்ணில் போரினால் இறந்த, அனைத்து இன மத மக்களையும், எந்த பேதமின்றிக் குறிக்கிறது.

நவம்பர் மாதம், இறந்தோரை நினைவு கூரும் மாதமாக, காலாதி காலமாக, உலகக் கத்தோலிக்க திருச்சபையில் நினைவு கூரப்பட்டு வருகிறது.

இந்த நவம்பர் மாதத்தில், 2 ஆம் திகதி இறந்த ஆத்துமாக்கள் தினம் முதல், பல இறந்த தினங்கள் நினைவு கூரப்படுகிறது.

நவம்பர் மாதத்தில், 20 ஆம் திகதியை, போரினால் இறந்த அனைவருக்காகவும் மன்றாடும் தினமாக, கத்தோலிக்க மக்களுக்கு மட்டும் வேண்டுதல் விடப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.மற்றவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை.

21 ஆம் திகதிதான், மாவீரர் வாரம் ஆரம்பிக்கிறது.இந்த அழைப்பு தொடரவிருக்கும் மாவீரர் வாரத்தை தொடக்கி வைத்து, அத்தினத்திற்கு மேலும் வலுவூட்டுகிறது என்பது ஏன் உணரப்படவில்லையெனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.