அமெரிக்காவுடன் பேச்சு: தமிழரசா? கூட்டமைப்பா? சுமந்திரன் சட்டக்குழுவா? பனங்காட்டான்
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடுகளை, அமெரிக்கா சென்றுள்ள மூவர் குழு செல்லும் இடங்களில் தெளிவுறுத்தும் வரையில் தனது ஆதரவு இவர்களுக்கு இருக்குமென்று தெரிவித்துள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஆட்சி மாற்றங்களுக்கான கருவிகளாக தமிழ் மக்கள் பயன்படுத்தப்படுவதற்கு இடமளிக்காமல் இவர்கள் செயற்பட வேண்டுமென்பது தமது எதிர்பார்ப்பு என்று முன்னெச்சரிக்கை செய்துள்ளார். சுமந்திரனுடன் செல்லும் சட்ட நிபுணர்கள் இருவரும் விக்னேஸ்வரனின் கருத்தை உள்வாங்கி கூர்மையாகவும், உன்னிப்பாகவும் செயற்பட வேண்டும். இலங்கைத் தமிழர் அரசியல் தீர்வுக்கென 1956லிருந்து 1987 வரையான காலப்பகுதியில் நான்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பண்டா-செல்வா ஒப்பந்தம் முதலாவது. பௌத்த பிக்குகள் பயமுறுத்தலாலும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பாதயாத்திரையாலும் இந்த ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க ஒருதலைப்பட்சமாக கிழித்தெறிந்தார்.
இரண்டாவது ஒப்பந்தம் டட்லி – செல்வா எனப்படுவது. தனது ஆட்சியை ஐந்து ஆண்டுகளுக்குத் தக்கவைக்க டட்லி சேனநாயக்க செய்த ஒப்பந்தம் நீர்மேல் எழுத்தானது.
மூன்றாவது ஒப்பந்தம் தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரனுக்கும், அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசங்கவுக்குமிடையிலானது. ஆறு சுற்றுப் பேச்சுகளின் பின்னர் சந்திரிகாவின் ஆட்சியில் இது படுகொலைக்குள்ளானது.
1987ல் ஜே.ஆரும் ராஜீவும் செய்து கொண்ட இலங்கை இந்திய இருநாட்டு ஒப்பந்தம், இலங்கை அரசியலமைப்பில் ஓர் அங்கமாக்கப்பட்டு பதின்மூன்றாவது திருத்தம் என்ற பெயரில் இன்றும் ஏட்டுச் சுரைக்காயாகவுள்ளது.
பதின்மூன்றாவது திருத்தத்தை மையப்படுத்தியே இலங்கைக்குள் இந்தியா தனது கால்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஆனால், அதனால் ஏனோ காய்களை நேர்த்தியாக முன்னெடுக்க முடியவில்லை.
விடுதலைப் புலிகளை ஏமாற்ற முனைந்து தோல்வி கண்டதால் ஈழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதில் முன்னின்று இயங்கிய இந்தியா, பேருந்தை ஓடவிட்ட பின்னர் துரத்துவது போன்று இப்போது பல வழிகளாலும் அதனை எட்டிப் பிடிக்க விரும்பி அசைகிறது.
கடந்த சில மாதங்களாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரும், இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பயணிக்கும் உயர் அதிகாரிகளும் கூட்டமைப்பினரையும், தனித்துச் சம்பந்தனையும் சந்தித்து வருகின்றனர். இந்தியாவுக்குச் செல்வதற்கான அழைப்பை எதிர்பார்த்துள்ளோமென சம்பந்தன் பல தடவை கூறி வந்தாராயினும், அதற்கான அழைப்பு இலவு காத்த கிளியின் கதைதான். அதற்குப் பதிலாக சம்பந்தனுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக(?) செய்திகள் வெளிவந்தன.
இதிலும்கூட இரண்டு வேறுபட்ட தகவல்கள் உண்டு. கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவரிடம் சம்பந்தன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில்தான் அழைப்பு வந்ததாக ஒரு தகவல். ஆனால், கூட்டமைப்பு அழையாவிருந்தாளியாகச் செல்கிறதென பங்காளித் தோழரான ரெலோ சொல்கிறது.
இதற்கும் அப்பால் அமெரிக்கா செல்வதற்கு சம்பந்தன் தெரிவு செய்த மூவர் குழு பற்றி அரசியல் அரங்கிலும் உள்வீட்டிலும் பல வாதங்கள் இடம்பெறுகின்றன. தமக்கான அழைப்பை முதுமை காரணமாக பயணிக்க முடியாத நிலையில் தமது லெப்ரினன்டான சுமந்திரனை அவர் நியமித்ததாக சுமந்திரனே ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினார். இதன் பின்னரே அமெரிக்க பயணம் பற்றிய விபரங்கள் வெளிவர ஆரம்பித்தது. அமெரிக்காவுக்கான தமிழர் தரப்புக் குழுவில் இடம்பெறும் மற்றிருவரான பிரபல சட்டவாளர்கள் கனக ஈஸ்வரன், நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரின் பெயர்களையும் சுமந்திரனே அறிவித்தார்.
தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வலது கரமாகத் திகழ்ந்த முன்னாள் செனட்டரான பிரபல வழக்கறிஞர் எஸ்.ஆர்.கனகநாயகத்தின் புதல்வர் கனக ஈஸ்வரன். நீண்ட காலமாக ஈழ அரசியலில் முன்னரங்கிலும் பின்னரங்கிலும் பங்காற்றி வருபவர் இவர்.
தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் செயலாளராகவும், செனட்டராகவுமிருந்து பின்னர் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராகவும் நல்லூர்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவுமிருந்த டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதனின் புதல்வி நிர்மலா சந்திரஹாசன். இவரது கணவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் புதல்வர்.
மூவருமே திறமையான சட்டவாளர்கள். ஈழ அரசியலில் நன்கு அறியப்பட்டவர்கள். கனக ஈஸ்வரனும் நிர்மலா சந்திரஹாசனும் நீண்ட அரசியல் பாரம்பரிய குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். ஆனால், இக்குழுவுக்குத் தலைமை தாங்கும் சுமந்திரன் அவ்வாறான பின்னணியைக் கொண்டவரல்ல. அரசியல் அனுபவஸ்தருமல்ல. எங்கிருந்தோ கூட்டமைப்புக்குள் பின்கதவால் நுழைக்கப்பட்டவர். எனினும், ஒரு தசாப்த கால வித்தியாச அரசியல் அனுபவம் இப்போது இவருக்குண்டு.
ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகள் குறித்தும், கோதபாய அரசு புதிதாக கொண்டு வரப்போவதாகக் கூறப்படும் புதிய அரசியலமைப்பில் எவ்வாறு இவ்விடயங்களை கையாள வேண்டுமென்பது குறித்தும் கலந்துரையாடவே இக்குழு அமெரிக்கா செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகள், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள், ஏமாற்றங்கள் என்பவை அமெரிக்காவுக்குத் தெரியாதவையல்ல. ஒருவகையில் சொல்லப் போனால் அமெரிக்கா இவ்விடயத்தில் ஒருபோதும் பார்வையாளராக இருக்கவில்லை. சுமந்திரனைவிட அமெரிக்காவுக்கு இலங்கைத் தமிழர் விவகாரம் நன்கு பரிச்சயமானது.
இந்திய – அமெரிக்க நட்புறவு ஏற்பட்ட பின்னர் ஈழ அரசியலின் ஒவ்வொரு நகர்வும் உள்ளும் புறமுமாக இவர்களால் கையாளப்பட்டது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இது தொடர்பாக நாளாந்தம் வாசிங்டனுக்கு அனுப்பிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் பகிரங்கமாக்கியதை அனைவரும் அறிவர். நோர்வே தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தமது வகிபாகத்தின் பெறுபேறுகளை உடனுக்குடன் அமெரிக்காவுக்கு ராஜரீக வழியாக தெரியப்படுத்தியே வந்தார். அமெரிக்காவின் சமாதான முகமாக நோர்வே இயங்கியதென்பதைத் தெரிந்து கொண்டால் விடயங்களைப் புரிந்து கொள்ளலாம். எரிக் சொல்ஹெய்ம் தமது ஒவ்வொரு இலங்கை விஜயத்தின் பின்னரும் புதுடில்லிக்கூடாகவே நாடு திரும்பியதும் கவனிக்கப்பட வேண்டியது.
தமிழர் தரப்பு எவ்வாறு செயற்பட வேண்டுமென்று அண்மையில் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்த கருத்தும் இந்தியாவின் கூட்டமைப்பினருடான தொடர் சந்திப்புகளும், அமெரிக்காவுக்கு தமிழர் குழு விஜயம் மேற்கொள்வதும் ஒன்றோடொன்று கூட்டிப் பார்க்க வேண்டியவை.
கூட்டமைப்பின் சார்பில் மூன்று சட்ட நிபுணர்கள் குழு அமெரிக்கா செல்வதை எவரும் எதிர்க்கப்போவதில்லை. இதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஆனால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குத் தெரியாமலே சம்பந்தன் இவ்விடயத்தைக் கையாள்வது முறையானதாகத் தெரியவில்லை. பங்காளிக் கட்சிகள் மட்டுமன்றி தமிழரசுக் கட்சியினருக்குள்ளும் இது விடயத்தில் வேறுபாடுண்டு.
ரெலோவின் முன்னெடுப்பில் புளொட்டின் அனுசரணையோடு இன்னொரு கூட்டு ஏற்படுத்தப்பட்டு பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அண்மையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது, இதன் எதிர்வினையாகவே அமெரிக்க விஜய குழுவை சம்பந்தன் தம்மி~;டப்படி தெரிவு செய்ததாக பங்காளிகளுக்குள் பேசப்படுகிறது.
தமிழரசின் மூத்த பிரமுகரும், வடமாகாண சபையின் அங்கத்தவராகவுமிருந்த ஒருவர் இது தொடர்பாக இப்பத்தியாளரிடம் உரையாடுகையில் தெரிவித்த கருத்து பின்வருமாறு: – 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் கொழும்புவாசி ஒருவரின் பெயரை சிங்கள் அரசியல் கட்சியொன்றின் தேசியப் பட்டியலில் சேர்க்குமாறு வெளிநாடொன்று வேண்டியது. அதிலுள்ள இடக்குமுடக்கான நிலையைக் கருதி அக்கட்சியின் தலைவர் குறிப்பிட்ட கொழும்புவாசியை கூட்டமைப்புத் தலைமையிடம் கையளித்தார். அவரே இப்போதைய செயற்பாடுகளின் மையப்புள்ளி – இவ்வாறு அவர் கூறினார்.
நல்லாட்சி அரசுக்கு கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. அந்த அரசின் பிரதமரை ஜனாதிபதியாகவிருந்த மைத்திரி பதவி நீக்கியபோது, அதற்காக நீதிமன்றப் படியேறிய கூட்டமைப்பு அவரை மீண்டும் பிரதமராக்கியது, புதிய அரசியலமைப்பு வருவது நிச்சயமென்று நம்பிய அனைத்துக்குமே இறக்குமதிப் பிரமுகரே காரணமென்பது என்பது தமிழரசுப் பிரமுகரின் கருத்துக்கூடாக தெரிய வந்த விடயம்.
இப்போது இடம்பெறும் அமெரிக்க விஜயம் எதிர்பார்க்கப்படும் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமென நம்பலாமா? இவ்வாறு கேள்வி எழுப்புவதற்கு சில நியாயப்பாடுகள் உண்டு.
அமெரிக்காவுக்கான மூவர் குழுவுக்கு வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. குழுவுக்குத் தலைமை தாங்கும் சுமந்திரன் இக்குழுவை கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவென்று கூறியுள்ளார். சுமந்திரனைத் தவிர மற்றிருவரும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அல்லாததால் இவ்வாறு அழைப்பது சரியா என்று கேட்கப்படுகிறது.
இக்குழு தொடர்பாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்பைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் பேசுவதற்கு தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் செல்வதில் எந்தத் தவறுமில்லை என்று குறிப்பிட்டுள்ளதனூடாக இதனை தமிழரசுக் குழுவென்று இவர் அடையாளமிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் மிறர் பத்திரிகை இக்குழுவை சுமந்திரன் குழுவென்று தலைப்பிட்டுள்ளது. இக்குழு அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னரும் இந்தப் பெயர் பிரச்சனை நீளும்போல் தெரிகிறது.
இதற்கிடையில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரை இந்த வாரம் சந்தித்த கூட்டமைப்பினர், தற்போதைய அரசின் கீழான புதிய அரசியலமைப்பு தமிழருக்குச் சாதகமாக இருக்காதென்று சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், இந்த அரசியலமைப்பின் கீழ் தமிழர் அரசியல் அபிலாசைகளை எவ்வாறு உள்ளடக்குவது என்பது பற்றிப் பேசவே மூவர் குழு அமெரிக்கா செல்வது விந்தையாக இருக்கிறது.
இதனை தெளிவுபடுத்துவதாக விக்னேஸ்வரன் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கும் பின்வரும் விடயம் ஆழ்ந்த கவனத்துக்குரியது:
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடுகளை இவர்கள் (மூவர் குழு) செல்லும் இடங்களில் தெளிவுறுத்தும் வரையில் தனது ஆதரவு இவர்களுக்கு இருக்குமென்று கோடு கீறியுள்ளதோடு, ஆட்சி மாற்றங்களுக்கான கருவிகளாக தமிழ் மக்கள் பயன்படுத்தப்படுவதற்கு இடமளிக்காமல் இவர்கள் செயற்பட வேண்டுமென்பது தமது எதிர்பார்ப்பு என்று முன்னெச்சரிக்கை செய்துள்ளார்.
சுமந்திரனுடன் செல்லும் சட்ட நிபுணர்கள் இருவரும் விக்னேஸ்வரனின் கருத்தை உள்வாங்கி கூர்மையாகவும், உன்னிப்பாகவும் செயற்பட வேண்டும்.