யாழ்.எம்.ஜி.ஆர் காலமானார்!
யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை மதியம் நடைபெறவுள்ளது.
கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம் (வயது 79) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர ரசிகனாவார். அத்துடன் அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியும் ஆவார். தமிழகம் சென்று எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தும் உள்ளார்.
எம்.ஜி.ஆர் போன்று கறுத்த கண்ணாடி அணிந்து தோளில் சால்வையுடன் சைக்கிளில் வலம் வரும் இவரை பலரும் யாழ்ப்பாண எம்.ஜி.ஆர் என அழைத்தனர். அதனால் அவரின் இயற்பெயர் பலருக்கு தெரியாது.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக மட்டும் அவர் இருக்கவில்லை. சமூக தொண்டனாகவும் , வறியவர்களுக்கு உதவி செய்பவராகவும் இருந்தார்.
எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் , நினைவு நாட்களில் தன்னால் முடிந்தளவுக்கு தனது சொந்த நிதியில் ,வறியவர்களுக்கு உதவிகளை செய்வார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை பகுதியில் எம்.ஜி ஆருக்கு சிலையும் வைத்துள்ளார். நினைவு நாள் மற்றும் பிறந்தநாளுக்கு தீபங்கள் ஏற்றி எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.