November 22, 2024

இலங்கை சித்திரவதைகள் குறித்து ஸ்கொட்லாந்து விசாரணைகளை நடத்த வேண்டும்

இலங்கையிலிருந்து வெளியேறி ஸ்கொட்லாந்தில் தஞ்சமடைந்த தமிழ் அகதிகளுக்கு எதிராக இலங்கைப்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் முன்னாள் விசேட அறிக்கையாளரும் மனித உரிமைகள் தொடர்பான பூகோள கற்கையகத்தின் செயலாளர் நாயகமுமான பேராசிரியர் மன்ப்ரெட் நோவார்க் வலியுறுத்தியுள்ளார்.அத்தோடு குறித்த அகதிகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கைப்பொலிஸாருக்கு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வழங்கிவருகின்ற பயிற்சியை ஸ்கொட்லாந்து பொலிஸார் நிறுத்தவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் தன்னால் வெளிப்படுத்தப்பட்ட ‚சித்திரவதை நுட்பங்கள்‘ தற்போதும் பயன்படுத்தப்படுவதாக மன்ப்ரெட் நோவார்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

‚கை,கால்களில் அல்லது விரல்களில் மாத்திரம் கட்டி நபர்களைத் தொங்கவிடுதல், பெற்றோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துதல் போன்றவை சித்திரவதைகளுக்காகக் குறிப்பாகப் பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டியிருந்தேன்‘ என்று தெரிவித்துள்ள அவர், ‚இத்தகைய சித்திரவதை நடைமுறைகள் இலங்கைப் பொலிஸாரால் பயன்படுத்தப்படுவதற்கான ஆதாரங்கள் காணப்படுமாயின் எதிர்வருங்காலத்தில் அவர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதிலிருந்து ஸ்கொட்லாந்து பொலிஸார் விலகிக்கொள்ளவேண்டும்‘ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‚இதுபற்றிய விசாரணைகளுக்கு இலங்கை உரியவாறு ஒத்துழைப்பை வழங்காவிட்டால், கடந்த காலங்களில் வலியுறுத்தப்பட்டதைப்போன்று இவ்விவகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லப்படவேண்டும்‘ என்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் முன்னாள் விசேட அறிக்கையாளர் மன்ப்ரெட் நோவார்க் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது