வெளிநாடு செல்ல முயன்ற 19 பேர் கைது!!
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்ற 4 சிறுவர்கள் உட்பட 19 பேர், இலங்கை கடற்படையினரால் சிலாபம் முகத்துவாரத்தில் வைத்து இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படையினரால், சிலாபம் கடற்பகுதியில் இன்று (09) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே, 19 பேர் சிலாபம் முகத்துவாரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், சிற்றூர்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, நீர்கொழும்பு, கொச்சிக்கடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிற்றூர்திச் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 16 ஆண்கள், பெண் ஒருவர், மூன்று சிறுவர்கள் மற்றும் சிறுமி உட்பட 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினர், கடல்மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சித்ததாகவும் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கடல் வழியாக சட்டவிரோதமாக இடம்பெயர்வது உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த கடற்படையானது நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
சிலாபம் கரையோரப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், சிலாபம் முகத்துவாரத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றை சோதனையிட்ட போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.