November 22, 2024

பிரான்சில் நடைபெற்ற பரிதி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 9 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று (08.11.2021) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது. தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள பந்தன் கல்லறையில் பகல் 11.00 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு அரசின் கொரோனா சட்ட திட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கேணல் பரிதி அவர்களின் கல்லறைமீது தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்புச்செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.பாலக்குமாரன் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச் சுடரினை கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைக்க கல்லறைக்கான மலர் மாலையினை கேணல் பரிதியில் துணைவியார் அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் வணக்கம் செலுத்தி, சுடர் வணக்கம் செய்தனர்.

தொடர்ந்து நினைவுரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு பாலசுந்தரம் அவர்களும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்களும் ஆற்றியிருந்ததுடன்

லாக்கூர்நோவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி றுசெல் அவர்கள் கேணல் பரிதி அவர்களின் நினைவாக உணர்வோடு பிரெஞ்சுமொழியில் தகவல்களைப் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் கல்லறைவணக்க நிகழ்வு நிறைவடைந்தது.