November 22, 2024

வடக்கில் கொந்தளிப்பு!

சீரற்ற காலநிலை நீடிப்பதனால், யாழ்.மாவட்ட கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது, அதேவேளை கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் கோரியுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரை பகுதியில், பல படகுகள், நேற்று கடலுக்கு சென்ற நிலையில், காலநிலை மாற்றத்தினால், கரை திரும்ப முடியாமல் அகப்பட்டுள்ளதாக மீனவ அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

நேற்று பிற்பகல் கடலுக்கு சென்ற பின்னரே, காலநிலை அபாயம் தொடர்பாக அறிவித்தல்கள் வெளியாகியிருந்தன.

அதேவேளை கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரொருவரின் உடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து கடந்த 2ஆம் திகதி மூவர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து மீனவர் ஒருவர் கடலில்தவறி விழுந்து காணாமல் போயிருந்தார்.

காணாமல் போயிருந்த மீனவரை கடந்த 4 நாட்களாக சக மீனவர்கள் தேடிவந்த நிலையில் இன்று மதியம் அவரது உடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.