November 22, 2024

ஊழலும் மோசடிகளினாலும் நிரம்பியுள்ளது  இந்த அரசாங்கம் !

இந்த அரசாங்கமானது பொய்யான ஒரு அரசாங்கம். அனைத்து விடயங்களிலும் பொய்யும், ஊழலும் மோசடியும் மக்களுக்கு சுதந்திரமில்லாத ஒரு மோசமான அரசாங்கமாக உள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan) கடுமையாகச் சாடியுள்ளார்.

அரச தலைவர் தொடக்கம் பிரதமர், அமைச்சர்கள் என அனைவருமே பொய்களை சொல்லும் நிலைப்பாடே காணப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வியாபார நோக்குடனும் இந்த அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது. நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்றிருந்தேன்.

அவற்றில் எதனையும பூர்த்தி செய்யாமல் சிறிய ஒரு விடயத்தினை மட்டும் செய்துவிட்டு அதற்கொரு மாபெரும் திறப்பு விழாவினை செய்துவிட்டு சென்றிருந்தார். இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை (Douglas Devananda) அரச தலைவர் நியமித்துள்ளதாக செய்திகளில் பார்க்க கூடியதாகவுள்ளது.

கடந்த காலத்தில் கடத்தல், காணாமல்போதல் சம்பவங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் (Douglas Devananda) ஈபிடிபி குழுவுக்கும் தொடர்பிருப்பதாக பல்வேறு நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை நியமித்தது ஏற்றுக்கொள்ளமுடியாது.

இலங்கையில் உள்ள மீனவர்களின் பிரச்சினையை பார்க்க முடியாத அமைச்சர் எவ்வாறு அந்தமானில் உள்ள மீனவர்களைப் பார்க்கப் போகின்றார். எந்தவொரு விடயத்திலும் அமைச்சர் மீது நம்பிக்கைவைக்க முடியாது.

அமெரிக்கா செல்லவுள்ளதானது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சட்டகுழு அல்ல. அது ஒரு சட்ட நிபுணர்குழுவொன்று அமெரிக்காவுக்கு செல்லவுள்ளது. அதில் எமது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் (M.A.Sumanthiran) இடம்பெற்றுள்ளார்.

வட கிழக்கினை பொறுத்தவரையில் இன்று நம்பிக்கையேற்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு விடயத்தில் அமெரிக்காவுடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதை ஒரு நம்பிக்கையுடன் பார்க்க வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.