தமிழ் மக்கள் பெருமூச்சுவிடுகின்றனர்!
வடக்கில் இராணுவ மயமாக்கல்கள் கைவிடப்பட்டு தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டுமென்பதே ஜக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார் அதன் வடக்கிற்கான இணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏரான் விக்கிமரட்ண.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் இராணுவம் இராணுவத்தினது வேலைகளை மட்டும் பார்க்கவேண்டும்.அதனை விடுத்து மக்களது அன்றாட வாழ்வினுள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இலங்கையில் வடகிழக்கு மட்டுமல்ல நாடுமுழுவதும் தற்போது இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது.இராணுவ அதிகாரிகள் சிவில் நிர்வாக கதிரைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இராணுவ ஆட்சியால் ஒட்டுமொத்தமாக ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுவருகின்றது.
எங்களது பயணத்தின் போது வவுனியா,முல்லைதீவு ,கிளிநொச்சியென எவ்வளவு படையினர் மக்கள் மத்தியில் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
வடக்கிலுள்ள மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையாக சஜித் பிறேமதாசவில் நம்பிக்கை வைத்து வாக்களித்திருந்தனர்.அவர்களிற்கு எமது நன்றிகள்.ஆனாலும் அவர்களது நம்பிக்கை பொய்த்துப்போகாது.ஜனாதிபதியாகவிட்டாலும் அவர் நல்லதொரு எதிர்கட்சி தலைவராக மக்களோடு மக்களாக போராடுகின்றார்.
ஆனால் தென்னிலங்கையிலுள்ளவர்கள் 69 இலட்சம் பேர் வாக்களித்து ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர்.அவர் தன்னை நம்பி வாக்களித்த 69 இலட்சம் பேரையும் தற்போது நடுவீதியில் அநாதரவாக கைவிட்டுள்ளார்.
உரமில்லை,பால்மா இல்லை,காஸ் இல்லையென பட்டினியோடும் பசியோடும் அவர்கள் வீதி வீதியாக அலைகின்றார்கள்.
அதனால் தான் சொல்கிறேன் வடக்கு மக்கள் நல்லதொரு தீர்க்கதரிசியாக சஜித் பிறேமதாசாவிற்கு வாக்களித்தமையால் அவர்களது நம்பிக்கை பொய்த்துப்போகாதிருக்கின்றது.
இப்போது ஒரே நாடு ஒரே சட்டமென ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச புறப்பட்டிருக்கின்றார்.இதனை ஜக்கிய மக்கள் சக்தி முற்றாக நிராகரிக்கின்றது.
இலங்கை நூற்றாண்டு நூற்றாண்டாக பௌத்த,இந்து,முஸ்லீம் மற்றும் கத்தோலிக்கர்களென பல மத,இன மக்கள் வாழ்கின்றதொரு நாடு.
அங்கு ஒரு நாடு வேண்டுமாயின் இருக்கலாம். ஆனால் ஒரு சட்டமென்ற பேச்சிற்கே இடமில்லை. இங்கு பல சட்டங்கள் இருக்கின்றன.
நாங்கள் எங்களது பயணத்தின் போது பொதுமக்களை,புத்திஜீவிகளை ,பத்திரிகையாளர்களையென பலரையும் சந்தித்துவருவதாகவும் ஏரான் விக்கிமரட்ண தெரிவித்தார்.