Dezember 3, 2024

சுப. தமிழ்செல்வனின் 14ஆம் ஆண்டு நினைவு இன்று அனுஷ்டிப்பு

தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசு இருந்த காலத்தில் தாயகத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக பணியாற்றிய சுப. தமிழ் செல்வனின் ( S.P. Thamilselvan) 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

சிறிலங்காவில் தமிழ்செல்வனின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பதற்கு நீதிமன்றங்கள் தடை உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், புலம்பெயர் தேசத்தில் நினைவு தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தின் முதன்மை இராஜதந்திரியாக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் முக்கிய இராஜதந்திரப் பணிகளில் சுப.தமிழ்செல்வன் ஈடுபட்டு வந்தார்.

2007ஆம் ஆண்டின் இன்றைய நாளில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் சுப.தமிழ்செல்வன் கொல்லப்பட்டிருந்தார்.

அவரது நினைவு தின நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன. எனினும், தாயகத்தில் தமிழ்செல்வனின் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு தடை விதித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்றைய திகதியிடப்பட்ட நீதிமன்ற தடை அறிக்கையில், பயங்கரவாத நடவடிக்கைகள் மீண்டும் நாட்டில் தலைதூக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், தற்போதைய கொரோனா தொற்று நிலைமைகளை கருத்தில் கொண்டும் இவ்வாறான நினைவேந்தல்களை நடத்தாமல் இருக்கவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணி செய்த இவர், பலகட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.