November 22, 2024

பிரான்சில் இடம்பெற்ற குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு

இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல்

குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், 2 ஆம் லெப்.மாலதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட ஒக்ரோபர் மாதம் வீரகாவியமான மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான இவ்றி சூர்சென் பகுதியில் இன்று (31.10.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு உணர்வெழுச்சியாக இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – மாவீரர் பணிமனை மற்றும் இவ்ரி சூர்சென் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச் சுடரினை இவ்ரி சூர்சென் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.சாந்தகுமார் சாந்தலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

ஈகைச்சுடரினை வடபோர்முனை கண்டல் பகுதித் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர் 2ஆம் லெப்.தமிழின்பன் அவர்களின் தாயாரும் முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த கணனிப்பிரிவு சிறப்புத் தளபதி இதயன் அவர்களின் சகோதரியும் கப்டன் கஜன் அவர்களின் சகோதரரும் லெப்.கேணல் நாதன் அவர்களின் சகோதரியும் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அணிவகுத்து சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.

அரங்க நிகழ்வுகளாக இவ்றி தமிழ்ச்சோலை மாணவிகளின் மாவீரர்களின் நினைவு சுமந்த நடனமும், தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பாடகர்களின் மாவீரர் கானங்களும் இடம்பெற்றிருந்தன. சிறப்பு உரையினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் குறித்த மாவீரர்களின் உயிர்த்தியாகங்கள் பற்றிக் குறிப்பிட்டதோடு, வரும் நவம்பர் 27 அன்று அனைவரும் ஒருமித்து மாவீரர்களை நினைவுகொள்ளத் தயாராகவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதுடன், ஸ்கொட்லாந்தில் கோத்தாவிற்கு ஏதிராக நாளை இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எமது ஆதரவை பலவழிகளிலும் நாம் வெளிப்படுத்தவேண்டும் என்பதாக அவருடைய உரை அமைந்திருந்தது.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.