தாயகத்தில் மக்கள் கருத்துக்கணிப்பு ஆரம்பம்!
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்தொருமிக்க வைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெற்று அவற்றினை முன்னிறுத்தி தமது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்களாட்சி செயற்குழு அறிவித்துள்ளது. அவ்வேலைத்திட்டத்திறகான கேள்விக் கொத்துக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.மிக விரைவில் அவற்றை மக்கள் மத்தியில் சமர்ப்பித்து அவர்களிடம் அபிப்பிராயங்கள் பெறப்படுமென செயற்குழு சார்பில் சட்டத்தரணி எப்.எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்தொருமிக்கும் வேலைத்திட்டத்தை ஆரமப்பித்துள்ள தமிழ் மக்களாட்சி செயற்குழுவின் செய்தியாளர் மாநாடு இன்று சனிக்கிழமை திருகோணமலையில் இடம் பெற்றது.
அங்கு விளக்கமளித்த போதே சட்டத்தரணி விஜயகுமார் இதனை தெரிவித்தார்.
தமிழ் மக்களாட்சி செயற்குழுவின் செயற்திட்ட இணைப்பாளராக அவர் ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கெடுத்திருந்தார்.
அவருடன் சட்டத்தரணிகள் யாழினி கௌதமன் மற்றும் வீ.எஸ் தனஞ்சயன் ஆகியோரும் தமிழ் மக்களாட்சி செயற்குழுவின் சார்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கெடுத்திருந்தனர்.
முன்னதாக தமிழ் மக்களாட்சி செயற்குழுவின் ஏற்பாட்டாளர்களான தென் கையிலை ஆதீனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி நோயல் இமானுவேல் ஆண்டகை , ஆகியோரும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஆசி மற்றும் அறிமுக உரையை வழங்கியிருந்தனர்.
தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் தமிழ் தேசியத்தை மக்களின் இயல்பான கருத்துக்கள் ஊடாக வெளிப்படுத்தி அவற்றை அவற்றை ஆவணப்படுத்த வேண்டும்.தமிழ் தேசிய கோரிக்கைகளை முன்வைக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கோரிக்கையில் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கும் வகையில் மக்களின் கருத்துக்கள் கேள்விகள் மூலமாக உறுதிப்படுத்தப்படும்.இவ்வேலைத்திட்டம் தொடர்பாக பத்திரிகை ஆசிரியர்கள் ,அரசியல் பத்தி எழுத்தாளர்கள்,ஊடக நிறுவனங்களின் செய்தியாசிரியர்கள் ஆகியோருடனும் தொடர்ச்சியாக கலந்துரையாடி இருப்பதாகவும் சட்டத்தரணி விஜயகுமாhர் தெரிவித்தார்.
இதனிடையே ஊடகவியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் , தமிழ் தேசிய நிலைப்பாட்டில் மக்கள் தெளிவாக இருப்பதாகவும் அதனை செம்மைப்படுத்தி ஆவணப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் தெரிவித்தார். எந்த ஒரு அரசியல் கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தும் அல்லது அவர்களை ஒரே கூட்டமைப்பாக செயற்பட வைப்பதும் தமது நோக்கம் அல்ல என தெளிவுபடுத்திய அவர் தமிழ் தேசிய கருத்தியலை ஒருமித்த குரலில் பேச வைப்பதே தமது நோக்கம் என்றும் தெரிவித்திருந்தார்.