யாழ் பொது நூலகம் பேசுகிறது – வருடங்கள் கடந்தாலும் மறக்காத ஈழத்தின் வலி
அன்பான பிள்ளைகளே !துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? – நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? – கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?
என்று பாரதிதாசன் என்றொரு தமிழ்ப்புலவன் எம்மைச் சூழும் துன்பத்தைப் போக்கி இன்பத்தை வாழ்வில் சேர்க்க தமிழை மருந்தாகக் குறிப்பிட்டுப் பாடினானே ! ஆனால்இ அந்தத் தமிழுக்கே துன்பம் நேர்ந்தால் அது எங்கே போகும் ! இருண்டு கிடக்கும் என்னுடைய நாட்களுக்கு ஒளியேற்றிஇ வாழ்வில் இன்பம் சேர்க்கக்கூடிய வலிமை இளையோராகிய உங்களுடைய கைகளிலேதான் இருப்பதால்இ மனம்திறந்து உங்களுடன் நான் பேசுகிறேன்.
தமிழை உலகுக்கு அடையாளப்படுத்திய எம் திருவள்ளுவர் கல்வி குறித்து எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார்.
´தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு´
‚அப்படிப்பட்ட அறிவைத் தாம் மட்டும் பெற்று இன்புறாமல், அடுத்தவர்களும் பெற்றுப் பயனடைவதைக் கண்டு இன்புறுவர் கற்றறிந்தோர்.
´தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்´
அந்தவகையிலேதான் என்னை நேசிக்கும்இ நான் அன்புபாராட்டும் எனது தமிழ்மக்களும் பொதுநூலகம் ஒன்றை உருவாக்கியமையும். அதன் ஆரம்பக்கட்டமாக இந்த யாழ்மண்ணிலே க.மு.செல்லப்பா என்ற தமிழ் அறிஞர் தன்னிடமிருந்த ஏராளமான நூல்களால் பொதுமக்கள் அனைவரும் பயனடையவேண்டும் என்ற தூரநோக்கில் பொதுநூலகம் ஒன்றை அமைப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இவருடைய இந்த உயர்ந்த விருப்பத்தைப்பற்றிக் கேள்வியுற்ற ஏனைய தமிழறிஞர்களும்இ சமூகநலன்விரும்பிகளும் இணைந்து முன்னெடுத்த முயற்சியினால் 1934இல் யாழ்நகரின் மத்தியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 844 நூல்களுடன் நாளிதள்களையும் சேர்த்து படிப்பகமும் நூலகமும் தொடங்கிவைக்கப்பட்டது. எனினும் தேனை நாடும் வண்டுகள்போல இந்த அறிவுத்தேனை நாடும் மக்களின் தொகை நாளுக்குநாள் அதிகரிக்கத்தொடங்கியதால் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக, யாழ்.நகரசபைக்குரிய கட்டடத்தின் ஒரு பகுதிக்கு மாற்றப்படவேண்டியதாயிற்று. இதற்கிடையில் தாம் சேகரித்துவைத்திருந்த கிடைத்தற்கரிய ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப்பிரதிகள் உட்பட்ட ஏராளமான நூல்களை அனைவரும் பயனடையவேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் பலரும் அன்பழிப்புச்செய்தனர்.
இதனால் பெரியதோர் இடவசதியுடன் நூலகத்துக்கென தனியானதொரு கட்டிடம் அமைக்கப்படவேண்டுமென்பது அனைவராலும் உணரப்பட்டு, பொதுமக்களின் தனிப்பட்ட நிதிப்பங்களிப்பு கோரப்பட்டது. எண்ணையும் எழுத்தையும் தங்களின் இரு கண்களாகப் போற்றும் தமிழ்மக்கள் எல்லோரும் இதற்காக முன்வந்து பங்களித்தனர். புதிய கட்டிடத்திற்காக நூலகத்துறை வல்லுநரான கலாநிதி இரங்கநாதனின் திட்டங்களுக்கேற்ப, தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைநிபுணரரான நரசிம்மன் அவர்களால், திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்களோடுகூடிய கட்டிடமாக நான் வடிவமைக்கப்பட்டேன். அதன்படி அடிக்கல் 04.03.1953 அன்று நாட்டப்பட்டு, 6 வருடங்களிலே 1959இல் திறப்புவிழா நிகழ்ந்தது. வெகுவிரைவிலேயே சிறுவர்களிலிருந்து முதியோர்வரை நூலகமடியிலே வந்து அறிவுப்பால் பருகிச்செல்லத் தொடங்கினர். தாயாகி நானும் என் தமிழினத்தின் அறிவுப்பசி போக்கி, அனைவரையும் அணைத்து வளர்த்தெடுத்தேன்.
ஆனாலும், என்டைய மகிழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் 1981 யூன் 1ஆம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய சிங்களக்காவற்றுறையினரும் வெறிபிடித்த குண்டர்களும் நூலகக்காவலாளியை அடித்து விரட்டிவிட்டு, வாசற்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறுகச்சிறுகச் சேர்த்துக்கட்டிய பெருமைக்குரிய அறிவுக்களஞ்சியமாக விளங்கிய எனக்கு அத்தீயவர்கள் தீமூட்டி மகிழ்ந்தனர். எமது தாயகத்திருநாட்டில் எமது தொன்மையைப் பறைசாற்றும் அரிய பழஞ்சுவடிகள் உட்பட 97000 இற்கும் அதிகமான கிடைத்தற்கரிய நூல்களுடன் தென்னாசியாவின் முதன்மை நூலகமாகவும், ஆசியாக்கண்டத்திலே இரண்டாவது பெரியதானதாகவும் அக்காலத்தில் விளங்கிய நான், அணைப்பதற்கு எவருமேயின்றி பேரினவாதத்தீயில் கருகிக்கொண்டிருந்தேன்.
பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டிய காவற்றுறை நிலையம் இங்கிருந்து வெறும் 700 மீற்றர் தொலைவிலேதான் அமைந்திருந்தது. இது தவிர தேர்தல்காலப்பாதுகாப்புக்கென கொழும்பிலிருந்து வந்திருந்த விசேட காவற்றுறையினர் தங்கியிருந்த பொதுவிளையாட்டு மைதானமும் நேரெதிரே கண்ணுக்கெட்டிய தூரத்திலேதான் காணப்பட்டது. இப்படியான நிலையில்தான் வேலியே பேரினவாதவெறிகொண்டு பயிரை மேய்ந்துகொண்டிருந்தது. யாழ்மண்ணின் கல்விவளர்ச்சிக்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்த நூலகம் எரிவதைக் கேள்வியுற்ற மதகுருவாகிய கல்விமான் டேவிட் நெஞ்சுபொறுக்காமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இலங்கைத்தீவிலே தமிழ்மக்களுக்கெதிராக காலத்துக்காலம் கொடூரமான வன்முறைகள் அரச ஆதரவுடன் கட்டவிழ்த்துவிடப்பட்டு தமிழ்மக்களின் உயிர்களும் உடமைகளும் அழிக்கப்படுவதுண்டு. இது அவற்றையெல்லாம் தாண்டி தமிழ்மக்களின் பெருமைக்குரிய அழியாச்செல்வமான கல்விமூலத்தையே நிர்மூலமாக்கிவிடுவதாகத் தோன்றியது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னதாகத்தான் தரப்படுத்தல் என்ற தனது சட்டத்தினூடாக தமிழ் இளையோர் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பிற்கு சிறீலங்கா அரசு முட்டுக்கட்டை போட்டது. இப்போது எத்தகைய தடைவரினும் சளைக்காது, அறிவுத்தேடல்கொண்டு தம்மை வளப்படுத்த வருவோருக்கு உறுதுணையாக இருந்த அறிவுப்பொக்கிசத்தையும் அழிக்கிறது. கிட்லரின் காலத்தில் யேர்மனியிலே யூதர்களுக்கு எதிராகக் கிளர்ந்த நாசிசமும் முதலில் 1933 இல் யூதமக்களின் கல்விச்செல்வத்தைத்தானே குறிவைத்து எரித்தது. அதே கொடுமைதான் ஈழத்தமிழர்மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
அன்பான மாணவச்செல்வங்களே!
இது ஏதோ திடீரென்று தமிழர்களைப் பிடிக்காத ஒருசில சிங்களவெறியர்கள் செய்ததாக எவராவது தணித்துப்பேச முயலலாம். அந்தக் கொடுமையிலே எரிக்கப்பட்டு சிதையுண்ட எனது வலிக்குத்தான் உண்மை தெரியும். நான் எரிக்கப்பட்ட யூன் 1 ஆம் திகதி மட்டுமல்ல! இதற்கு முந்தைய மே 31 ஆம் திகதியே சிங்களக்காடையர்களின் அட்டகாசம் யாழ்நகரிலே தொடங்கிவிட்டது. அதிலும் முழு யாழ்மாவட்டத்தின் தமிழர்தொகை 7,30,000 இற்கும் அதிகமாக இருந்த அக்காலப்பகுதியில், வெறுமனே 4600 பேரளவிலேயே சிங்கள மக்களின்தொகை காணப்பட்டது. அவர்களும் தொழில்நிமித்தமாக வசித்துவந்தவர்களாகும். ஆனால், என்னை எரித்தழிக்கும் நோக்கத்துடன் வந்தவர்களோ இதற்காகவெனத் தென்னிலங்கையிலிருந்து அரச ஆதரவுடன் விசேடமாக அழைத்துவரப்பட்ட சிங்களக்காடையர்களாகும். இவர்களுக்குத் தலைமைதாங்கியவர் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த அமைச்சரான காமினி திசநாயக்கா. யாழ்நூலக எரிப்பு தொடர்பிலான இவரது பங்கு குறித்து பின்னாளில் 1991இல் ஜனாதிபதியாக விளங்கிய அதே ஐ.தே.கட்சியைச் சேர்ந்த ரணசிங்க பிரேமதாசாவே பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மகாவலி அபிவிருத்தித்திட்டம் என்ற போர்வையில் தமிழரின் தாயகநிலத்தின் பெரும்பகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றி மகிழ்ந்த காமினி திசநாயக்கா, தமிழருக்கான கல்விச்செல்வத்தைக் கரியாக்க நினைத்ததில் வியப்பில்லையே ! பொதுநூலகம் எரிவதைக் கேள்வியுற்று அங்கு விரைந்த தீயணைப்புப்படையினரை விளையாட்டரங்கிலே இருந்த விசேடபொலிசாரே தடுத்துத் திருப்பி அனுப்பியிருந்தமை விசாரணைகளின்போது வெளிவந்த உண்மைகளாகும். இது மட்டுமல்ல ´சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுவீர்´ (Sinhalese! Rise to Protect Buddhism) என்ற நூலை எழுதியவரும், 1984இல் முன்னெடுக்கப்பட்ட வட்டமேசைமாநாட்டை பேச்சுவார்த்தையினூடாக தமிழ்மக்களுக்கு அதிக உரிமைகிடைத்துவிடப்போவதாக அதை எதிர்த்த ஐ.தே.கட்சியின் கைத்தொழில்- மற்றும் விஞ்ஞான அமைச்சரான சிறில் மத்தியூ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கேணல் தர்மபால உட்பட முக்கியமான புள்ளிகள் அப்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.
என்னுடைய அழிவுக்கோலம் கண்டு முழு உலகமுமே துடித்தது. சிங்கள மக்களிடையே இருக்கக்கூடிய நன்னெஞ்சம் படைத்தவர்களும் இதைக் கடுமையாகக் கண்டித்தனர். எந்தக் கல்வியை எம்மிடமிருந்து பறிக்கப்பதற்காகச் சிங்களம் என்னை எரித்ததோ, அதே தீயின் ஒளியிலேயே எனது தமிழினம் சிங்களப்பேரினவாதம் பற்றிய தெளிவைப் பெற்றது. கல்வியில் இன்னும் முன்னேறவேண்டுமென உறுதிகொண்டது. எரிந்து கருகிக்கிடக்கும் என்னைக் காணும் இளந்தலைமுறையினர் வெறுமனே கல்வி மட்டுமன்றி அரசியல், பொருளாதார, படைபலமுமே ஈழத்தமிழினத்தை நிரந்தரமாகத் தற்காக்கும் என்பதில் இலட்சியத்தெளிவு பெறத்தொடத்தொடங்கியிருந்தனர்.
யாழ்நகரின் அழிக்கப்பட்ட நூலகத்தின் நினைவுச்சின்னமாக மாறி ஈழத்தேசிய ஆன்மாவில் அழிக்கமுடியாத வடுவாக நான் மாறியிருந்தமை, சிங்களத்திற்குப் பொறுக்கவில்லை. அதற்காகப் பேரினவாதம் தீட்டிய திட்டமே அழிவுச்சின்னத்தையே அழித்துவிடுவதானது. அதன்படி 1981இல் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின்போது நடந்ததை 2001 இல் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அப்போதைய ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்கவினால் சீர்செய்வதென்ற ´வெண்தாமரை இயக்க´விளம்பரத்துடன், எனது வரலாற்றுக்கோலம் வண்ணப்பூச்சுகளைக்கொண்டு மறைக்கப்பட்டது. உண்மையிலேயே பாவப்பிராயச்சித்தம் செய்யவிரும்பினால் பழைய நூலகத்துக்கு அருகிலே புதிதை அமைக்குமாறு தமிழ்மக்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளைப் புறம்தள்ளி, சிங்களம் ஈழத்தமிழினத்திற்கு இழைத்த அருவருப்பான கொடுமையின் அடையாளம் அழிக்கப்பட்டது. 1995இலிருந்து இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் கொடுந்துயர் அனுபவிக்கக்காரணமாயிருந்த அதே சந்திரிகா அரசுதான், 2001இல் தமிழ்மக்களுக்கான எந்தவித உதவியையும் வழங்காது, ஒரு புறம் சமாதானப்பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டைகளைப் போட்டவாறே, மறுபுறம் வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்றுக்கொண்டு இதைச் செய்தது.
இப்போது சொல்லுங்கள் !
எனக்குள் இருந்த உங்களின் தொன்மையையும், அயராத உழைப்பையும், அவற்றால் எட்டிய மேன்மைநிலையையும் அழித்துவிட்டு, தங்களின் அநாகரிகச்செயலுக்கு அடையாளமாக விளங்கிய எச்சத்தையும் பூச்சுப்பூசி அழித்துவிட்டு, நான் இருக்கிறேனாம் என்கிறார்கள். வெளியே தெரியாதவாறு புதிய கட்டடத்திற்குள் புதைக்கப்பட்டிருக்கும் என்னால் உரத்துச் சொல்லமுடியாது. ஆனால், எனக்குள் இன்னும் துடிக்கும் ஆறாதவலியை ஈழத்தமிழினத்தின் வரலாற்றுவலியை உணரமுடிபவர்களால் நிச்சயம் உணர்ந்துகொள்ளமுடியும். ஆறாத வலிகளின் வலிமை என்றுமே விலைபோகாது !!
(28.10.2021-சு.பி.சாந்தன்)
சொல்லாளுமை: பாடத்தில் வரும் புதிய சொற்களை அவற்றுக்குரிய மொழிபெயர்ப்புடன் எழுதிப்படிக்கவும்.
1) நூலகங்கள் எமக்கு எவ்வகையிலே பயன்படுகின்றன என்பதைப் பற்றிய Mindmap தயாரிக்கவும்.
2) 1930களில் யூத இனமக்களின் கல்விக்கு எதிராக யேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட (Kristallnacht) அழிப்புகளை யாழ்நூலக எரிப்புடன் ஒப்பிட்டு ஆராய்க.
3) யாழ்நூலக எரிப்புக்கு முன்னரான படங்களையும் மேலதிக தகவல்களையும் தேடிப்பெறவும். எம் நூலக அழப்பினால் தமிழினம் தற்போது சந்திக்கும் பிரச்சினைகளை ஆராய்க.
4) யாழ்நூலகத்தை 2001இல் மீளப்புதுப்பிக்கத் தொடங்கிய சிறீலங்கா அரசு அக்காலத்தில் தமிழினம் தொடர்பில் எவ்வாறான போக்கைக் கடைப்பிடித்தது ?
5) மீண்டும் இப்படியான ஒரு பேரிழப்பு ஏற்படாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் ?