இருளுள் மூழ்குகின்றது இலங்கை!
இலங்கையில் 1996 ஆம் ஆண்டு அனுபவித்த 72 மணித்தியால தொழிற்சங்கப் போராட்டத்தைப் போன்று நவம்பர் 3 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
கெரவவலப்பிட்டியில் உள்ள யுகடனவி எல்என்ஜி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு மாற்றும் அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் இவ்வாறு தெரிவித்தார்.
வேலைநிறுத்தத்தின் திகதியை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக இரண்டு நாள் போராட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த கோரிக்கைகளை முன்வைத்து நாளை வெள்ளிக்கிழமை (29) நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதுடன் கோரிக்கைகளை முன்வைத்து மனுவொன்றில் கைச்சாத்திடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சனிக்கிழமை (30) கொழும்பில் அனைத்து CEB ஊழியர்களையும் கூட்டி அங்கிருந்து எங்களது அடுத்த நடவடிக்கையை முடிவு செய்வோம். 1996 இல் CEB தொழிற்சங்கம் 72 மணிநேர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தது.
தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக அந்த நேரத்தில் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சனிக்கிழமை முடிவிற்குப் பிறகு, எங்கள் தொழிற்சங்க நடவடிக்கை 1996 இல் இருந்ததைப் போன்றதாக இருக்கலாம் என்று திரு. ஜெயலால் மேலும் கூறினார்.