கிளிநொச்சி:உரத்தை காணோம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் கமநல சேவை நிலையங்களில் இருந்த பெருந்தொகையான இரசாயன உரம் காணாமல் போயுள்ளதாக விவசாயிகளால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த போகத்தில் நெல் மற்றும் மேட்டுநில பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கான கமநல சேவை நிலையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மானிய உரம் விவசாய செய்கைகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் மீதமாக இருந்த உரம் காணாமல் போயுள்ளது. இந்த உரம் எவ்வாறு காணாமல் போனது அல்லது எவ்வாறு விநியோகிக்கப்பட்டது என்பது தொடர்பில் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதாவது மாவட்டத்தில் போகத்திற்குரிய உரவிநியோகம் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றதன் பின்னர் 16.25 மெற்றிக் தொன் யூரியா, 23.45 மெற்றிக் தொன் ரீ.எஸ்.பீ,.23.21 மெற்றிக் தொன் எம். ஓ.பீ மீதமாக இருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது குறித்த களஞ்சியங்களில் உரம் இல்லை என்றும் இந்த உரம் எவ்வாறு விநியோகிக்கப்பட்டது அல்லது கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பில் எந்தவிதமான பதில்களையும் பெற்றுக் கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே, யாருக்கு விநியோகிக்கப்பட்டது என்ற தகவல்களை பெற்றுக் கொள்வது வெளிப்படுத்துவதற்கு எந்த அதிகாரிகளும் முன்வராத நிலை காணப்படுகிறது. உரம் காணாமல் போயிருப்பது தொடர்பில் விவசாயிகள் மட்டத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.