பழைய இரும்பு வியாபாரத்தில் கடற்படை!
மீனவர்களது நங்கூரங்களை பழைய இரும்பு வியாபாரிகளிடம் விற்க முற்பட்ட இலங்கை கடற்படை அம்பலமாகியுள்ளது.
கடற்படையை நம்பி மாதகல் கடலில் நங்கூரம் திருடுவதற்கு வந்த மூவர் அப்பகுதி மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நேற்று இரவு (25) வாகனத்தில் வந்த மூவர் மாதகல் கடலில் உள்ள நங்கூரங்களை திருடுவதற்கு முயன்றனர். இதை அவதானித்த அப்பகுதி மீனவர்கள் அவர்களை துரத்திப் பிடித்தனர்.
“கடற்படையினர் எமக்கு இரண்டாயிரம் கிலோ இரும்பு தருவதாக கூறினர். எனவே அந்த இரும்பினை எடுத்துச் செல்வதற்கே நாங்கள் இங்கு வந்தோம். நங்கூரம் என்றால் என்ன என்றே எமக்கு தெரியாது.” என்று தெரிவித்ததாக மீனவர்கள் கூறினர்.
ஒவ்வொரு நங்கூரமும் ரூபா ஐயாயிரம் தொடக்கம் பதினைந்தாயிரம் பெறுமதியுடையவை.
எமக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய கடற்படையே எமது சொத்துக்களை திருடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கின்றது என்றால் கடற்படையினர் எதற்கு இங்கு இருக்கவேண்டும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.