அனுராதபுரத்திலிருந்து விருப்பமான சிறைகளிற்கே!
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விரும்பும் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளதோடு லொகான் ரத்வத்தைக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருத்தி வைத்து தலையில் கைத் துப்பாக்கி வைத்து அச்சுறுத்தியமைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மற்றும் சித்திரவதையின் கீழ் வழக்கை தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் நீதியரசர்கள் மூவரின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது அமைச்சர் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர்களிற்கு எதிராக சித்திரவதைக் குற்றச் சாட்டு முன் வைக்கப்படுவதனால் இவர்கள் சார்பில் தாம் ஆயராகவில்லை என சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கை ஆராய்ந்த நீதியரசர்கள் சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஆராய்ந்து அநுராதபுரம் சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய தடுப்புக் காவல் கைதிகளை அவர்கள் விரும்பினால் விருப்பம் கோரும் சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் அல்லது அநுராதபுரத்தில் இருக்க சம்மதம் தெரிவித்தால் அங்கே இருக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சரான லொகான் ரத்வத்தைக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் சட்டமா அதிபரின் ஆலோசணையுடன் குற்றவியலின் கீழ் அறிக்கை பெற்று மன்றிற்கு சமர்ப்பிக்குமாறும் நீதியரசர்களான காமினி அமரசேகர, யசந்த கோதாகொட, ஜனக் டீசில்வா ஆகியோர் இடைக்கால கட்டளையிட்டு வழக்கை சித்திரவதை மற்றும் சட்டத்தின் கீழ் சமனாக பாதுகாத்தல், இனமொழி பாகுபாடு ஆகிய மூன்று விடயங்களின் அடிப்படையில் 11, 12-1,12-2 ஆகிய சரத்தின் கீழ் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர்.