November 21, 2024

இசையால் உலகையே நனையவைத்த இசைவேந்தர்களுக்கு யேர்மனியில் இசையஞ்சலி!

கடந்த 17.10.21 (ஞாயிற்றுக்கிழமை) பி.ப 4.15 மணிக்கு ஈழத்தில் பிறந்து கனடியநாட்டில் வாழ்ந்த „இசைக்கலைமணி“ அமரர். வ.வர்ணராமேஸ்வரன் மற்றும் ஈழத்தில் பிறந்து வாழ்ந்து பலமேடைகளை அலங்கரித்த „மிருதங்க கலாவித்தகர்“ அமரர். சதா. வேல்மாறன் ஆகிய ஒப்பற்ற ஈழத்து கலைஞர்களுக்கு யேர்மனி டோட்மூன்ட் நகர தமிழர் அரங்க மண்டபத்தில் இசையஞ்சலி நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றல் நிகழ்வினை திருமதி.மீரா நித்தியானந்தன்,திருவாளர். சின்னராஜா கருணராஜன்,திருமதி.பத்மகாந்தன் ஜெகதா,திருமதி.சக்திவேல் ஜெயமாலா,திருவாளர்.வி.சபேசன், திருவாளர்.இரவீந்திரதாஸ் கார்த்தீபன்,திருமதி.காயத்திரி பிரபாகரன் ஆகியோர் சுடரினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.
தொடர்ந்து தேவாரம் திருமதி.ஞானாம்பாள் விஜயகுமார் ( சங்கீத ஆசிரியர்) பக்திபூர்வமாக பாடினார்கள். தொடர்ந்து அகவணக்கம், நாத சங்கம அஞ்சலி ஆரம்பமானது. ஈழத்து தவில்மேதை வித்துவான் குமரகுரு புதல்வன் பாலமுரளியுடன் இணைந்து ஈழத்து தவில்மேதை உதயசங்கர் சகோதரன் கீதன் அவர்களும் ,மிருதங்கவித்துவான் நையினை விஜன் அனுசாந் அவர்களும் இணைந்து நாத சங்கம நிகழ்வினை சிறப்புற நிகழ்த்தினார்கள். இரு இசைமேதைகளுக்கான மலர் அஞ்சலியும், திருச்சுடர் ஏற்றும் நிகழ்வும் ஆரம்பமானது. நிகழ்விற்கு வருகைதந்திருந்த அனைவரும் அமைதியாக அஞ்சலியினை செலுத்தினார்கள்.அஞ்சலி நிகழ்வு முடிவுற்றதும். தொடக்கவுரையினை அகரம் சஞ்சிகை ஆசிரியர் திரு. த. இரவீந்திரன் நிகழ்த்தினார். இசையர்ப்பணம் நிகழ்வினை சங்கீத ஆசிரியர் திருமதி.மீரா நித்தியானந்தன் அமரர்.வ.வர்ணராமேஸ்வரன் அவர்களைப்பற்றிய கவிதையினை பாடலாக பாடி சபையோரை கண்ணீரில் நனையவைத்தார்.
தொடர்ந்து ஆசிரியரும்,எழுத்தாளருமான திருமதி.நகுலா சிவநாதன் அவர்களின் அஞ்சலியுரை ஆரம்பமானது. அஞ்சலி உரையில் இவ் இரு கலைஞர்களினதும் இடைவெளியை நாம் நிரம்பிவிடுவதே இவர்கக்கு நாம் செய்யும் கைமாறு என்ற செய்தியை தொட்டுச்சென்றார்.தொடர்ந்து ஈழத்து அஞ்சலியுரைகள் விம்பத்தில்.யாழ்ப்பாண நல்லூர் திருஞானசம்மந்த ஆதீன குருமணி.சோமசுந்தரதேசிக ஞானசம்மந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச்சங்க பெருந்தலைவர். திருமிகு. „செந்தமிழ்சொல்லருவி“ சந்திரமௌலீசன் லலீசன் ஆகியோரது உரைகள் இடம்பெற்றன. ஆசிரியர் லலீசன் அவர்களின் உரையில் இசைத்தாயே கண்ணீர் விடுகிறாள் என்று கூறியமை பலரை கண்கலங்க வைத்தது.தொடர்ந்து சங்கீத ஆசிரியர் திருமதி.விஜயலக்சுமி போஜராஜசர்மா ,சங்கீத ஆசிரியர் திருமதி. விஜயகலா கிருபாகரன் அவர்களின் இசையஞ்சலி பாடல்,செல்வன்.தமிழ்பிரியன் ஜெய்குந்தன் ,செல்வன். அருண் பரமதாஸ்,திருமதி.ஜெகதா பத்மகாந்தன் பாடல், என்பன சிறப்பாக சபையை உள்ளுணர்ச்சியை மீண்டும் வர்ணராமேஸ்வரன் நினைவுகளை மீட்டது.
தொடர்ந்து வர்ணராமேஸ்வரன் அவர்களின் குரு முன்னைநாள் யாழ்ப்பாண நுண்கலைப்பீட தலைவர்,பேராசிரியர் மு.நவரட்னம் அவர்களின் நேரடி அஞ்சல் உரை சில நிமிடம் சபையை நிசப்தமாக கவலைததுப்ப வைத்தது. தொடர்ந்து நாட்டிய அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது திருமதி. துஸ்யந்தி ஜெகதீஸ்வரன் மாணவிகளினது நாட்டிய அஞ்சலி சமர்ப்பணம் சிறப்பாக அமைய தொடர்ந்து திரு.வி.சபேசன், திரு.நையினைவிஜயன், திரு.தேவன்,ஆகியோர் உரைகளுடன் மீண்டும் திரைவிம்பத்தில் லண்டன் வாழ் சங்கீத மூத்த ஆசிரியர். திருமதி.பாக்கியம் செல்வராஜா மற்றும் யேர்மன் சங்கீத ஆசிரியர் திருமதி.கலைவாணி ஏகானந்தராஜா அவர்களுடைய அஞ்சலியுரைகளும் இடம்பெற்றது. தொடர்ந்து வெற்றிமணி ஆசிரியர் மு.க.சிவகுமாரன் அவர்களின் நேரடி அஞ்சல் உரையும், வர்ணராமேஸ்வரனின் நண்பியின் உரையும் நடைபெற்றது. தொடர் ந்து கி.த.கவிமாமணி குகதாஸ் அவர்களின் வர்ணராமேஸ்வன் மற்றும் சதா வேல்மாறன் பற்றிய ஒரு பார்வை என்ற தொணிப்பொருளில் உரையுடன் தொடர்ந்து முடிவுரையுடன் நிகழ்வு உணர்வுபூர்வமாக முடிவுற்றது. நிகழ்வினை சிறப்புற திருவாளர்.சக்திவேல் தொகுத்து வழங்கினார். நிகழ்விற்கான ஒலி அமைப்பினை சுவெற்ரா கருணாஸ் ஒலி அமைப்பினர் செய்திருந்தார்கள்.படப்பிடிப்பு சுவெற்ரா தினேஷ் .