முடிந்தது பருத்தித்துறை தரையிறக்கம்!
இலங்கை தமிழரசு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வெற்றிகரமாக முல்லைதீவிலிருந்தான பருத்தித்துறைக்கான படை தரையிறக்கத்துடன்
அமைதியாகி மீண்டும் மாகாணசபை தேர்தல் கதிரைகளை கைப்பற்றுவதற்கான குழிபறிப்புக்களில் மும்முரமாகிவிட்டனர்.கூட்டமைப்பின் பங்காளிகள் இன்னொருபுறம் கோபத்துடன் முகம் திருப்பியிருக்க இன்னொருபுறம் அகப்பட்ட துண்டுகளையெல்லாம் விற்று காசு பார்ப்பதில் அமைச்சர் டக்ளஸ் தம்பி தயானந்தாவுடன் மும்முரமாகியிருக்கிறார்.
இந்நிலையில் எமது கடல்வளத்திற்கு என்னவாகின்றதென அம்பலப்படுத்தியுள்ளார் வலை பதிஞர் ஒருவர்.
எங்களுடைய வடக்கு கிழக்கு பொருளாதாரத்தில் விவசாயத்திற்கு அடுத்ததாக அமைவது இந்த கடல் வளமே.
விதையாமலே பயன் தருகின்ற மிக பெரிய கடல் வளம் எம்மிடம் உள்ளது.
எங்களிடம் நிறைய கடல்வளம் இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் வளப்பயன்பாடு எங்களுடைய கரையில் இருக்கின்ற மக்களைவிட தென்பகுதி மக்களுக்கும் இந்திய மீனவர்களும் தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலைதான் காணப்படுகின்றது.
வடபகுதி முழுக்க 3000 மேற்பட்ட இந்திய மீனவர்களின் றோலர்கள் நிற்கின்றன.
ஒரு கிலோ இறால் பிடிக்கின்றது என்றால் 18 கிலோ மீன் விரயமாகின்றது.
ஒரு றோலர் ஒரு நாளைக்கு 25, 30, 50 கிலோ இறால் பிடிக்கின்றது என்றால் பாருங்கோ 18 ஆல் 50 பெருக்கும் போது எவ்வளவ மீன் விரையம் ஆகின்றது என்று.
இப்படி 3000 றோலர்களுக்கு பார்த்தால் எவ்வளவு போகின்றது.
3 நாளைக்கு அவர்கள் இங்கு வந்து போகின்றார்கள். அப்பொழுது எங்களுடைய ஆட்கள் தொழிலுக்கு போக முடியாது ஏனென்றால் இங்கத்தைய மீனவர்கள் படுப்பு வலை தான் போடுவார்கள்.
அதை றோலர் வந்து இழுத்து போட்டு போய்விடும். அதனால் அந்த நேரத்தில் இவர்கள் அங்கு செல்வதில்லை.
ஒரு வலை போனால் 3 இலட்சம் 4 இலட்சம் நட்டமாகிவிடும். நிறையப் பேருக்கு அப்படி நடந்திருக்கின்றது.
அதனால் அவர்கள் கடலுக்கு போவதில்லை. 3 நாட்கள் தொழில் இழப்பு நட்டஈடும் ஒன்றுமில்லை.
றோலர் இழுவை மடி வலைகள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
ஆனால் நல்லாட்சி அரசாங்கமும் சரி தற்போதைய அரசும் சரி அதனை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.
அதில் நிறைய அரசியல் இருந்தது / இருக்கின்றது
மறுபுறம் தென்பகுதி மீனவர்கள் குறிப்பிட்ட காலத்தில் வந்து வாடி அடித்து இருந்து கடற்தொழில் செய்து விட்டு குறிப்பிட காலம் முடிய திரும்ப போய்விடுகின்றார்கள்
அதாவது வாடைக்காற்று நேரம் வந்து வாடியடித்து இருந்து விட்டு சோழக காற்று நேரம் அவர்கள் போய்விடுவார்கள்.
ஆனால் வாடியெல்லாம் அப்படியே இருக்கும். அதற்கு கடற்படையினர் காவல் காக்கின்றார்கள்.
கொக்கிளாய், நாயாறு எல்லைப் பிரதேசம், தலைமன்னார் பியர், சவுத்பார், சிலாபத்துறை அப்படியே அவர்கள் கையில் போய்விட்டது.
மஹிந்த ராஜபக்சே காலம் , நல்லாட்சி அரசாங்கம் மற்றும் கோத்தபாயா ராஜபக்சே நிருவாகம் என எல்லாவற்றிலும் ஒரே வேலைகளை தான் செய்கிறார்கள்
முல்லைத்தீவில் அட்டை பிடிக்கும் பிரச்சனை பெரும் பிரச்சனை. தென்பகுதி மீனவர்களுக்குத்தான் ஆழ்கடலில் மூழ்கி அட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.
எங்களுக்கு அவ்வாறு வழங்குவதில்லை. இலாபம் முழுக்க அவர்கள் தான் பெற்றுக்கொள்கின்றார்கள்.
கடல் அட்டையை பிடித்து மதிப்புக்கூட்டி தென்பகுதி நிறுவனங்களுக்கு ஏற்றுவது வரை தென்பகுதி மீனவர்கள் தான் பார்க்கின்றார்கள்.
அதே போல இறால், அட்டை, நண்டு எல்லாவற்றையுன் தென்பகுதியிலிருந்து வரும் கம்பனிகள் தான் கொண்டு போகின்றார்கள்.
இன்று நாங்கள் அவை எல்லாம் சாப்பிட முடியாத கட்டம். நிறைய அள்ளிச் செல்கின்றார்கள்.
ஆனால் சம்பாத்தியம் எங்களுக்கு வருவதில்லை.
அது தென்பகுதி கம்பனிகள் போன்றவற்றிற்கே சென்றடைகின்றது.
இதை தவிர்த்து கடல் அட்டை, நண்டு, இறால் போன்றவை வளர்க்கலாம்.
இங்கு அதற்கு சரியான இடம் இருக்கின்றது. ஆனால் சரியான ஆளணி இல்லை, முதலீடில்லை, பாதுகாப்பு இல்லை அவ்வாறாக நிறைய பிரச்சனை இருக்கின்றது.
ஆனால் எதை செய்வது என்றாலும் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தான் நாங்கள் செய்ய வேண்டும்.
எங்களுடைய கையில் எதுவும் இல்லை.
கடல் வளம் சம்பந்தமான கடற்றொழில் அமைச்சு என்பது மத்திய அரசின் கீழ் தான் இருக்கின்றது. வடமாகாணத்தில் நன்னீர் மீன்பிடி அமைச்சு மட்டும்தான் இருக்கின்றது.
கடல் சம்பந்தமான அனுமதி எவருமே செய்யமுடியாத அளவிற்கு முழு கட்டுப்பாடும் மத்திய அரசின் கையில்தான் இருக்கின்றது.
ஆனால் அவர்களிடமும் பற்றிய ஆய்வும் இல்லை அக்கறையும் இல்லை.
உண்மையில் வடக்கு கிழக்கு கடல் வளத்திற்கு இந்திய மீனவர்களும், தென்பகுதி மீனவர்களும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றார்கள். எல்லா துறைமுகங்களும் கடற்படையினரிடமே இருக்கின்றது.
துறைமுகங்களை நாங்கள் பயன்படுத்த முடியாது. இன்று மீன்பிடித்துறைமுகம் என்று சொல்லி ஒன்றுமில்லை.
மயிலிட்டித்துறைமுகம்தான் கொஞ்சம் விடப்பட்டிருக்கின்றது. கொஞ்சப்பேர் போயிருக்கின்றார்கள். அதிலும் சில இடங்கள் இன்னும் விடவில்லை.
கடல் தொழில் வித்தியாசமானது விவசாயம் போன்றதில்லை. ஆளணிப் பிரச்சனை இருக்கின்றது.
பயிற்சி பெற்றவர்களும் கிடையாது. சரியான நிபுணத்துவ ஆலோசனை இல்லை. பல்கலைகழக மட்டத்தில் கூட அது குறைவுதான்.
வளத்திற்கு ஆளில்லை, பாதுகாப்பிற்கு இல்லை. அப்படியிருக்கும் போது எப்படி இந்த தொழிலை முன்னெடுத்து செய்கின்றது.
இன்று யாழ்ப்பாணத்தில் பார்த்தால் 15000 – 20000 மெற்றிக்தொன் உற்பத்திதான் இடம் பெறுகின்றது.
அன்று இருந்த 50000 மெற்றிக் தொன் அளவை எட்ட முடியாமல் உள்ளது. அதே போல் முல்லைத்தீவு, மன்னாரிலையும் மிக மோசமான நிலையில் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து உள்ளது.
ஆகவே நாங்கள் வேற மாதிரி யோசிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன.
எங்களுடைய கடல்வளங்களை மீன்பிடிக்கு, சுற்றுலாப் பயணத்துறைக்கு வினைத்திறனுடன் எப்போது பயன்படுத்தப் போகின்றோம்