Mai 20, 2024

மற்றுமோர் செயலணியை நியமித்தார் கோட்டாபய

இலங்கை அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் கீழ் ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பசுமை விவசாயத்துக்கான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் வௌியிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய, அபிவிருத்தியடைந்த விவசாய பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புதல், நச்சுத்தன்மையற்ற விவசாய உற்பத்திகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குதல் ஆகியவற்றிற்காக இந்த ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

14 பேர் அடங்கிய குறித்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக விஜித் வெலிகல நியமிக்கப்பட்டுள்ளார்.

பசுமை விவசாயத்தை நிலைபேறான வகையில் பேணுவதற்கான முறையான வேலைத்திட்டங்களை தயாரித்தல், சேதன உரத்தை அடையாளம் காணல், கிருமி நாசினிகளை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகளை குறித்த குழுவினர் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.