November 22, 2024

பொலிஸார் கோவிலுக்கே போகவில்லையாம்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உயர் அதிகாரியொருவர் பாதணியுடன் ஆலயத்திற்குள் வரவேயில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் பொலிஸ் மா அதிபர் விஜயம் மேற்கொண்டு இருந்த நிலையில் , யாழில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் மற்றும் வல்லிபுர ஆழ்வார் ஆலயம் என்பவற்றுக்குள் காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சப்பாத்துக்களை கழற்றாது சென்றமை தொடர்பிலான ஒளிப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.

குறித்த பொலிஸ் அதிகாரி ஆலய நுழைவாயிலிலேயே தமது கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.  அவர் ஆலயத்திற்குள் சென்றதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது.

பொலிஸார் கடமைகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் மேல் சட்டையை கழற்ற கூடாது என்ற போதிலும், யாழ்ப்பாணம் − நல்லூர் ஆலயத்திற்குள் பொலிஸ் அதிகாரிகள் செல்லும் போது, மேல் சட்டையை கழட்டியே கடமையில் ஈடுபடுகிறவர்கள்.

அது இந்து மதத்திற்கு பொலிஸார் வழங்கும் கௌரவம். ஆலய நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸ் அதிகாரி சென்றமை கூட தவறுதலாக இடம்பெற்ற ஒன்று, பொலிஸ் அதிகாரிகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து மதங்களையும் கௌரவத்துடன் மதிப்பார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.