கோயிலுள் காலணி:அங்கயனும் கண்டனம்!
மத சம்பிரதாயங்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என சிங்கள காவல்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன்.
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களான வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் மற்றும் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயம் ஆகிய இந்து மதத் தலங்களுக்குள் காலணியுடன் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் நுழைந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.
பூமியில் மானிடராகப் பிறந்த அனைவருமே ஏதோவொரு மதத்தின் பால் பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த மதத்தை அலட்சியப்படுத்தும் போது அதன் மீது பற்றுக்கொண்ட சமூகம் நிச்சயமாக கொதித்தெழுவார்கள்.
ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இவ்வாறு மதத்தை அவமதிக்கும் வண்ணம் நடந்துகொண்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது. பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மதப் பற்றோடு இந்து ஆலயங்களில் வழிபாட்டில் ஈடுபட்ட போதிலும் ஒரு பொலிஸ் அதிகாரி விட்ட தவறு ஒட்டுமொத்த பொலிஸார் மீதும் தவறான கண்ணோட்டத்தை வரவழைத்து விட்டது.
இந்து ஆலயங்களின் புனிதத்தை கேள்விக்குட்படுத்திய பொலிஸ் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ திலும் அமுனுகம அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.
தமது மற்றும் பிற சமயங்களின் விழுமியங்களையும், சம்பிரதாயங்களையும் பின்பற்ற வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.