கனடா தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் – மணிவண்ணன்
தமிழ் மக்களுக்காக கனடா அரசாங்கம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என, யாழ். மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாணத்துக்கு, இன்று (12) வருகை தந்த இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே, மேயர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சந்திப்பு, யாழ். மாநகர சபையில் அமைந்துள்ள மேயர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மேயர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை கனடா தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதுமட்டுமல்லாமல், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு தொடர்பான விசாரணைகளுக்கும் கனடா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும் எனவும், அவர் கோரினார்.
அத்துடன், ‚கனடா நாட்டின் ரெறண்டோ மாநகர சபைக்கும் யாழ் மாநகர சபைக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட நிலையில், அதன் செயற்பாடுகள் பாரியளவில் நடைபெறவில்லை.
‚ஆகவே, கனடா அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் செயற்படும் நிலையில், தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்காக கனடா அரசாங்கம் தமது பங்களிப்புக்களை மேற்கொள்ள வேண்டும்‘ எனவும், மேயர்; கோரிக்கை விடுத்தார்.