வடக்கு ஆளுநர்:தொடர்ந்தும் சாள்ஸ்!
எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (11) காலை 10 மணியளவில் மெய்நிகர் செயலி ஊடாக இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், பிரதம செயலாளர் ,வடமாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார திணைக்கள அதிகாரிகள் ,மற்றும் கல்வித் துறைசார் பணிப்பாளர்கள் இணைந்திருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் பாடசாலை சுற்றுச்சூழல் நிலைமைகள்; குறிப்பாக கிணற்றுக் குடிநீரின் தரம், பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பான விபரங்கள், டெங்கு மற்றும் கோவிட்-19 விழிப்புணர்வு நடவடிக்கைகள்(முகக்கவசம் அணியும் மற்றும் நீக்கும் முறை,சமூக இடைவெளி, நோய் நிலைமைகளை பாடசாலைக்கு தெரிவிக்கும் முறைமை, மற்றும் சுகாதார வழிகாட்டல்கள்) தொடர்பாக துறைசார் தரப்பினரிடம் கேட்டறிந்த ஆளுநர் அவர்கள் , குறித்த தரப்பினருக்கு முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.
குறிப்பாக பாடசாலை கிணற்றின் குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்துதல், நீர்த்தாங்கிகளை சுத்தம் செய்தல், மாணவர்கள் குடிநீர் மற்றும் உணவு வகைகளை இயன்றவரை வீட்டில் இருந்து கொண்டு வருவதை பெற்றோர்கள் உறுதிப்படுத்தல், மாணவர் ஓய்வு அறை தயார் நிலையில் இருத்தல், பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புதல் மற்றும் அழைத்துச் செல்லலை பெற்றோர் உறுதிப்படுத்தல் ஆகியவற்றை கண்காணிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் பெற்றோர்-ஆசிரியர் கலந்துரையாடலை ஏற்பாடு செய்யவும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத ஆசிரியர் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் விபரங்களை சமர்ப்பிக்கவும், இதனை மாவட்ட கோவிட் -19 தடுப்பு செயலணி கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
மேலும் கடந்த காலத்தில் பெரும் அளவிலான கோவிட்-19 உயிரிழப்புக்கள் வீட்டில் சம்பவித்துள்ளமையையும் உரிய நபர்கள் தமது நோய் நிலைமை தொடர்பாக சுகாதார தரப்பினருக்கு அறிவிக்காமையையும் சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கு கோவிட்-19 தொடர்பாக விழிப்புணர்வு செயற்பாடுகளை தினந்தோறும் மேற்கொள்ளவும் குறிப்பாக கிராமப்புற பாடசாலைகளில் துரித அன்ரியன் பரிசோதனையை மேற்கொள்ள குறைந்தது இரு ஆசிரியர்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தினார். மேலும், 19 வயது மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கலை முதலாவதாக ஆரம்பிக்கவும் தொடர்ந்து 18, 17 ,16 வயது மாணவர்களுக்கான தடுப்பூசியினை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் , கடந்த ஒரு வருடமாக பாடசாலைச் செயற்பாடுகளில் இருந்து சற்று தளர்ந்திருந்த மாணவர்களின் உடல் உள ஆரோக்கியம் மாறுபட்டிருக்கலாம் என தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், பாடசாலை ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு ஆசிரியர்களும் மாணவர்களை தனித்தனியாக அணுகி அவர்களது உடல்( கண்பார்வை,பற்சுகாதாரம்) உளநிலை பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். அதற்காக ஆசிரியர்கள் உடல் ஆற்றலை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டங்களை மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்ததுடன் இது தொடர்பில் உரிய தரப்பினர் எதிர்வரும் ஒரு மாத காலத்தினுள் அறிக்கையை சமர்ப்பிக்கவும் ஆலோசனை வழங்கினார்.
மேலும், தூர இடங்களிலிருந்து பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து சேவைகள் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் ஆலோசிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேற்குறிப்பிடப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக சகல பாடசாலைகளும் வகுப்புக்களை ஆரம்பிக்க முன்னர் உரிய முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையை உறுதிப்படுத்த வேண்டும் என ஆளுநர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.