கிளியில் பாலும் தேனும்:வைத்தியசாலையில் வாள்வெட்டு!
மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அல்லக்கைகளும் கிளிநொச்சியில் பாலும் தேனும் ஓடுவதாக சொல்லிக்கொள்ள கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தின் வாசலில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஏற்கெனவே வாள்வெட்டில் காயமடைந்து சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று (09) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலைக்குள் உள்நுழைந்த மூவர் பார்வையாளர்கள் போன்று சென்று குறித்த நோயாளியின் பெயரை குறிப்பிட்டு விசாரித்துள்ளனர்.
இதன் போது அங்கு கடமையிலிருந்த உத்தியோகத்தர் நோயாளி தியட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையின் முதலாவது மாடியில் உள்ள சத்திர கிசிச்சை கூடத்தின் வாசலுக்குள் சென்றவர்கள் அங்கு சிகிச்சைக்காக காத்திருந்த தாம் தேடிச் சென்ற நபரை வாசலில் வைத்து வெட்டியுள்ளனர்.
வெட்டுக் காயங்களுக்குள் உள்ளானவர் குருதி வடியவடிய சத்திர கிசிச்சை கூடத்திற்குள் ஓடியுள்ளார். வெட்டிய நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.
உடனடியாக அருகில் உள்ள கிளிநொச்சி பொலிஸார் நிலையத்திற்கு தகவல் வழங்கிய போதும் அரை மணித்தியாலயங்களுக்கு பின் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கனவே இலங்கை காவல்துறை மீதும் வாள் வெட்டு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.