November 22, 2024

திரிபுபடுத்தப்பட்ட பாடநூலை மீளப்பெறுவது தொடர்பில் Warendorf நகரில் இன்று நடைபெற்ற ஒன்றுகூடல்.,


இன்று warendorf நகரில் திரிபுபடுத்தப்பட்ட பாடநூல் மீளப்பெறுவது தொடர்பான தமிழாலய ஒன்றுகூடல் நடைபெற்றது. இதில் TCC இன் பொறுப்பாளர் சிறிரவி, கல்விக்கழகப்பொறுப்பாளர் லோகன், திரு.மனோகரன், பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் வசந்தி, தமிழாலய மாநிலப்பொறுப்பாளர் வளர்மதி, தமிழாலய செயற்பாட்டாளர் ரமேஸ், TCC இன் மாநிலப்பொறுப்பாளர் Ennepetal சிறி , ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். TCC இன் துணைப்பொறுப்பாளர் ஓபர்கவுசன் சங்கர் இதில் கலந்துகொள்ளவில்லை. Dortmund இல் நடைபெற்ற ஒன்றுகூடலில் செயற்பாட்டாளர்கள்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டிய சங்கர் ஏன் Warendorf இற்கு வரவில்லை என்பது தெரியவில்லை. இவ்வாறான சிக்கல்களுக்குள் தற்போதைய TCC பொறுப்பாளர் சிறிரவி அவர்களைத் தள்ளிவிட்டு, அவர்மேல்குற்றம் சுமத்தி அவரை அப்புறப்படுத்திய பின், தன்னை TCC பொறுப்பாளராக ஆக்கிக்கொள்ள சங்கர் முனைகிறார் என்ற பலநாள் சந்தேகம் இப்பொழுது உறுதியாகிறது,

பெற்றோர் பிரதிநிதியான டயஸ் என்பவரை மாற்றுவதற்கு லோகன் கூட்டணி எடுத்த முயற்சி, மக்களின் ஒற்றுமையால் தவிடுபொடியானது.

புத்தகத்தை மீளப்பெறுவதற்கு ஜனவரி மாதம் வரை காலம் அவகாசம் கேட்டபொழுது மக்களால் அது மறுக்கப்பட்டது. புத்தகம் மீளப்பெறும்வரை பிள்ளைகளைக் கற்பதற்கு அனுப்பமாட்டோம் என பெரும்பான்மையான பெற்றோர் முடிவெடுத்தனர்.

தவறான பாடநூல் வெளிவந்ததற்கான பொறுப்பை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரியன் என்பவரே ஏற்கவேண்டுமென சிறிரவி தெரிவித்தபின்பு, யேர்மனியில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளாகச் செயற்பட்டவர்களை சிறிரவி காவல்துறையிடம் காட்டிக்கொடுத்ததற்கான நீதிமன்றக் கடிதத்தை பெற்றோர் பிரதிநிதியான டயஸ் அவர்கள் எல்லோருக்கும் காண்பித்தார்.

பாடநூல்களில் உள்ள திரிபுகளை புத்தகம் வெளியிடப்பட்ட மூன்றாம் நாளிலேயே கண்டுபிடித்துவிட்டோம் என மனோகரன் அவர்கள் கூறியபோது, அப்படியானால் ஏன் அவ்வாறான புத்தகத்தைத் தடுத்துநிறுத்தவில்லை என பெற்றோர் கேள்வியெழுப்பினர்.

„இப்பிடித்தான் நடக்கும், நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் செய்யவேண்டும்“ என தமிழ்த்திறன் போட்டிகளுக்கான பொறுப்பாளர் மனோகரன் மிரட்டுவதுபோல குரலை உயர்த்திப்பேசியது பொருத்தமற்றதல்ல என பெற்றோர் தெரிவித்தனர்.

மாநிலப்பொறுப்பாளர் வளர்மதி அவர்களே பாடநூலில் உள்ள திரிபுகளை ஒப்புக்கொண்டதாகவும், பொறுப்பிலுள்ளவர்கள் தவறுசெய்துவிட்டதாகவும் ஏற்கனவே கதைத்ததை பெற்றோர் ஒருவர் வெளிக்கொணர்ந்தார். ஆனால் மாநிலப்பொறுப்பாளர் வளர்மதி அவர்கள் அதை மறுத்துவிட்டார்.

உள்ளே ஒன்றுகூடலில் நடந்துகொண்டிருக்கையில், வெளியே நின்ற முன்னாள் மாணவர்கள் கல்விக்கழகத்திற்கெதிரான அட்டைப்படங்களைத் தாங்கியவண்ணம் நின்றிருந்தனர்.

திரிபுபடுத்தப்பட்ட பாடநூலை மீளப்பெறவேண்டி உறுதியாக நின்ற பெற்றோர் பிரதிநிதியை வெளியேற்ற நிர்வாகியும் கல்விக்கழகம் எடுத்த முயற்சி தவிடுபொடியானதுடன், திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்கள் மீளப்பெறப்படும்வரை பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பமாட்டோம் என்ற முடிவுடன் பெரும்பான்மையான பெற்றோர் வெளியேறினர்.