சிறிலங்கா மீது அமெரிக்கா இராணுவ பலத்தை பிரயோகிக்கும் ஆபத்து! அமைச்சர் கடுமையான எச்சரிக்கை
சிறிலாங்காவில் அமெரிக்காவுக்கு சொந்தமான பொருளாதார நிலையமோ, பொருளாதார வலயமோ இருந்தால், அதனை பாதுகாக்க அவர்கள் இராணுவ யுத்த பலத்தை பயன்படுத்துவார்கள் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் அரசுக்கு சொந்தமாக சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது எனவும் அவை அரச பாதுகாப்பின் ஓர் அங்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் பின்னர் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தகவல் வெளியிட்ட அவர்,
அமெரிக்காவுக்கு சொந்தமான பொருளாதார நிலையமோ, பொருளாதார வலயமோ இருந்தால், அதனை பாதுகாக்க அவர்கள் இராணுவ யுத்த பலத்தை பயன்படுத்துவார்கள். அது அவர்களின் தேசிய உரிமையின் ஒரு பகுதி. இப்படியான நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம்.
நாங்கள் இந்த நிலைப்பாட்டில் இருந்தாலும் வேறு சிலர் வேறான நிலைப்பாடுகளை கொண்டிருக்கலாம். அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு விநியோக உரிமை தொடர்பான எமது நிலைப்பாட்டை நாங்கள் அமைச்சவையில் முன்வைத்துள்ளோம்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், கொத்தலாவல பல்லைக்கழகம் போன்ற பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடிந்தது. எனினும் இந்த எரிவாயு விநியோகம் தொடர்பான உடன்படிக்கைகளை எம்மால் தீர்த்துக்கொள்ள முடியாதுள்ளது. எனினும் இந்த உடன்படிக்கையை மாற்றியமைக்க நாங்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறாம் என்றார்.