2025 ஆண்டுக்குள் சீனா படையெடுக்கும் – அச்சத்தில் தாய்வான்
சீனா 2025-க்குள் ஜனநாயக தீவாக விளங்கும் தைவானில் முழு அளவிலான படையெடுப்பை நடத்தும் என்று தைவான் பாதுகாப்பு அமைச்சர் சியு குவோ-செங் புதன்கிழமை கூறினார்.கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்குள், தங்கள் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 150 சீன விமானப்படை விமானங்கள் நுழைந்ததாக தைவான் அறிவித்தது. இது, சீனாவால் உரிமை கோரப்படும் இந்த தீவின் மீது சீனா நடத்தும் தொடர்ச்சியான துன்புறுத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதி என தைவான் கூறுகிறது.
சீனாவுடனான இராணுவ பதற்றம் 40 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு தற்போது மிக மோசமான நிலையில் அதிகமாக உள்ளது என சியு குவோ-செங் மேலும் கூறினார்.
தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே பதற்றம் ஒரு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. சீனா தைவானை தனது சொந்த பகுதி என்று கூறுகிறது. மேலும் சீன இராணுவ விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் வழியாக அடிக்கடி பயணித்து அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
பாராளுமன்றத்தில் சீனாவுடனான தற்போதைய இராணுவ பதட்டங்கள் குறித்து ஒரு சட்ட நிபுணரின் கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் சியு குவோ-செங், தான் இராணுவத்தில் சேர்ந்த 40 ஆண்டுகளில் இவ்வளவு மோசமான நிலையை தான் கண்டதில்லை என்று கூறினார். பதட்டமான பகுதியாக இருக்கும் தைவான் ஜலசந்தியின் குறுக்கே துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளுக்கும் வாய்ப்புள்ளாதாக அவர் தெரிவித்தார்.
ஒரு இராணுவ அதிகாரியாக, எனக்கு முன்னால் ஒரு அவசர நிலை உள்ளது“ என்று அவர் ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட உள்நாட்டு ஆயுதங்களுக்கான சிறப்பு இராணுவ செலவினங்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்தார்.
தேவைப்பட்டால் தைவானை பலப்பிரயோகத்தால் ஆட்கொள்ள வேண்டும் என சீனா கூறுகிறது. தைவான் ஒரு சுதந்திர நாடு என்றும், அது தன் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் என்றும் தைவான் கூறுகிறது. தங்கள் நாட்டில் நிலவும் பதட்டத்துக்கு தைவான் சீனாவை குற்றம் சாட்டுகிறது.
சீனா ஏற்கனவே தைவானை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் உள்ளது என்றும், அது 2025 க்குள் முழு அளவிலான படையெடுப்பை நடத்தும் திறனைக் கொண்டுள்ளது என்றும் சியு கூறினார்.
தைவானின் முக்கிய இராணுவ தளபாடங்கள் வழங்குநரான அமெரிக்கா தைவானுக்கான தனது உறுதியான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளதுடன் சீனாவையும் விமர்சித்தது. அமெரிக்கா தைவானுக்கு ஆயுதங்களை அளித்து குற்றம் புரிகிறது என்றும், தைவான் ஜலசந்தி வழியாக போர்க்கப்பல்களை அனுப்பி பதற்றத்தை அதிகரிக்கிறது என்றும் வாஷிங்டனின் கொள்கைகளை சீனா குற்றம் சாட்டுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தைவானின் சிறப்பு இராணுவச் செலவுகள் பெரும்பாலும் நிலம் சார்ந்த ஏவுகணை அமைப்புகள் போன்ற கப்பல் எதிர்ப்பு ஆயுதங்கள் உள்ளிட்ட கடற்படை ஆயுதங்களுக்குச் செல்லும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தைவான், செவ்வாய்க்கிழமை, சீன விமானப்படை விமானம் தனது வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.