சீனா – இந்தியா – அமெரிக்காவிற்கு தாரைவார்க்கப்படும் சிறிலங்கா!
நாட்டின் பெறுமதி மிக்க இடங்களை சீனாவுக்கு விற்பனை செய்தது மாத்திரம் அல்லாமல் மறுபுறம் இந்தியாவையும் அமெரிக்காவையும் திருப்திப்படுத்த மிகுதியுள்ள வளங்களையும் அரசாங்கம் விற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின் ஜே.சீ. அலவத்துவல (J. C. Alawathuwala) தெரிவித்துள்ளார்.
கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலுள்ள வளங்களைப் பாதுகாப்பதாக அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்னர் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.
குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) ஆட்சி காலத்தில் ஷங்ரிலா ஹோட்டலுக்கு வழங்கிய இராணுவ தலைமையகத்தின் இடத்தையும் மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இன்று இரண்டு வருடங்கள் செல்லும் முன்னர், எல்லாம் தலைகீழாகியுள்ளது.
இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Uthaya Gammanpila) மற்றும் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) உள்ளிட்டவர்கள் திருகோணமலைக்கு சென்றுள்ளதாக அறிந்தோம்.
எனவே, இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயமானது, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை பெறுவதற்கும் ஐ.ஓ.சி (IOC) எரிபொருள் நிறுவன ஒப்பந்தத்தை நீடிப்பதற்கே.
யுகதனவி மின்சக்தி ஏகபோக உரிமையை அமெரிக்காவுக்கு வழங்கியதால், எமது நாட்டில் மின்துண்டிப்பை கூட அமெரிக்க அரசாங்கமே செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் தான் எரிபொருளின் ஏகபோக உரிமையும் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது. ஆகவே, ராஜபக்ச (Rajapaksa) குடும்ப நிறுவனம் இந்த நாட்டை ஏலம் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது..
இவ்வாறு ஒவ்வொரு நாடுகளுக்கும் எமது நாட்டு வளங்களின் ஏகபோக உரிமையை வழங்கினால், எமது குழந்தைகளின் எதிர்காலம் அல்லது எமது நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.