ஆரியகுளத்தில் கலாச்சார மண்டபத்திற்கு அனுமதியில்லை!
யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தில் இந்து பௌத்த கலாச்சார மண்டபம் அமைக்க அனுமதிக்கப்படவில்லையென யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மறுதலித்துள்ளார்.
கடந்த மாதம் 28 ஆம் திகதிய மாநகர சபையின் அமர்வில் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் “நாகவிகாரை விகாராதிபதி பௌத்த அடையாளம் ஏதும் குளத்தின் நடுவே அமைக்க தங்களிடம் கோரியுள்ளாரா” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், “நாகவிகாரை பிக்குவிடம் இருந்து எந்தக் கடிதமோ கோரிக்கையோ இது தொடர்பில் வரவில்லை எனப் பதிலளித்தார்.
இருப்பினும் 30 அன்று மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்கு நாகவிகாரை விகாராதிபதி எழுதிய கடிதத்தில், இன ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு இந்து பௌத்த நல்லிணக்க மண்டபத்தை அமைப்பதற்கு தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என எழுதப்பட்ட கடிதத்தை தமிழரசு தரப்புக்கள் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் இன்று ஊடகங்களிற்கு பதிலளிக்கையில் வி.மணிவண்ணன் அவ்வாறு எந்தவொரு கட்டடமும் அமைக்க அனுமதிக்கப்படாதென தெரிவித்தார்.
எனினும் தமது பதவி காலத்தின் பின்னராக அவ்வாறான கலாச்சார கட்டடம் கட்டப்படாதிருப்பதை தடுக்க அழைப்புவிடுத்ததுடன் நாவற்குழியில் விகாரை அமைக்கப்பட்ட போது இத்தரப்புக்கள் எங்கிருந்தன என கேள்வி எழுப்பியிருந்தார்.