கொலை கலாச்சாரம்:அகப்பட்ட இலங்கை புலனாய்வு!
நன்றாக திட்டமிட்டு, சிங்கள பொதுமகனொருவரை கொலை செய்துவிட்டு இலங்கை புலனாய்வு பிரிவின் பெயரில் தப்பிக்கவோ சலுகைகளையோ அனுமதிக்கமுடியாதென தெரிவித்துள்ளது நீதிமன்றம்.
யுத்த காலத்தில் வடக்கில் கொலைகளை அரங்கேற்றிய படை புலனாய்வாளர்கள் பின்னராக தெற்கிற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டு மட்டக்குளி இராணுவ முகாமில் கட்டளை அதிகாரியாக செயற்படும் லெப்டினன் கேர்னல் சமந்த திலக்கரத்ன என்பவர் சிங்களவர் ஒருவரை தனது அணியுடன் கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனீ அபேவிக்ரம நேற்று (01) உத்தரவிட்டுள்ளார்.
தொட்டலங்க – எல்ல விளையாட்டு கழக தலைவராக செயற்பட்ட அகில சம்பத் ரத்னசிறி எனப்படும் 3 பிள்ளைகளின் தந்தையான 36 வயதான ஒருவரை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் தொடர்ந்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பொதுமகனது மனைவியுடன் திருட்டு உறவை கொண்டிருந்த புலனாய்வு அதிகாரியினது தூண்டுதலில் புலனாய்வு பிரிவால் அகில சம்பத் ரத்னசிறி கொல்லப்பட்டிருந்தார்.
சந்தேகநபர்களில் கொல்லப்பட்டவரது மனைவியான பெண்ணை தவிர்ந்த ஏனைய அனைவரும் புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகளாக செயற்படுபவர்கள் என்பதால், சிறைச்சாலையில் அவர்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவிடுமாறு கோரி, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
சந்தேகநபர்கள், புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும் மாறாக நன்றாக திட்டமிட்டு, பொதுமகனொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதால், வரப்பிரசாதங்களை வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதற்கு தம்மால் முடியாதென மேலதிக நீதவான் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.