தமிழ் பகுதியில் கால்நடைகளும் மரணிக்கின்றன?
தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்குத் தீர்வில்லாமல் ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்கக் கூடாது எனவும் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான திடீர் கைதுககள் நிறுத்தப்படவேண்டும் எனவும் வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கோரியுள்ளன.
மேலும் பயங்கரவாத சட்டம் இல்லாமலாக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, கையகப்படுத்தப்படும் எமது காணிகளுக்குரிய தீர்வு, மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் எடுக்கும் பட்சத்திலேயே ஜி.எஸ்.பி வரிச்சலுகையினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கிழக்கில் இருந்து கருத்துத் தெரிவித்த திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள்,
யுத்தம் நடைபெற்ற போது சம்பூர் மக்கள் 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து பத்து வருட காலமாக முகாம் வாழ்க்கையை வாழ்ந்து மீண்டும் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணிகள் அரச உடைமையாக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்படாமல் இருக்கின்றன. அதிலும் 818 ஏக்கர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டும் மீட்டுத் தரப்படவில்லை.
215 ஏக்கர் வயல் காணியில் கடற்படையினர் முகாமிட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் 520 ஏக்கர் காணி அனல் மின் நிலையத்திற்கென்று அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையம் நீக்கப்பட்டும் மக்களால் அக்காணிகளை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாமல் இருக்கின்றது. சம்பூர் மக்களிள் ஜீவனோபாயத் தொழில் விவசாயமாகவே இருக்கின்றது.
இருந்தும் முழுமையாக விவசாயத்தில் ஈடபட முடியாமல் இருக்கின்றது. இது இங்கு மாத்திரமல்ல அம்பாறை வரை இப்பிரச்சனை இருக்கின்றது. அத்துடன் மக்களின் உறுதி விவசாயக் காணிகளினுள் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினால் எல்லைகல் இடப்படுகின்றது. இதனால் விவசாயிகளின் தொழில் பாதிக்கப்பட்டு வருகின்றது. யுத்தம் முடிவுற்ற பின்னர் சமாதானம் சமாதானம் என்று தான் சொல்லுகின்றார்கள். ஆனால் எமது மக்களுக்கு அது உள்ளதா என்பது கேள்விக்குறியே.
எமது கால்நடைகளுக்கான காணிகள், வாழ்வாதாரக் காணிகள் வழக்கப்பட்ட பாடில்லை. இப்போதும் வனவள அதிகாரிகள் எல்லைகள் இடுவதும், வேலியிடுவதுமாகவே இருக்கின்றனர். மக்கள் அன்றாடம் செய்யும் தொழிலைச் செயவதற்கே சுதந்திரம் இல்லாமல் இருக்கின்றது. ஆனால் யுத்த காலத்தில் எமது மக்கள் பாதுகாத்து வந்த மணல், மலை, குளங்கள் அனைத்தையும் யாரோ எல்லாம் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான நிலைமைகளே இங்கு தொடர்ந்து இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, கையகப்படுத்தப்படும் எமது காணிகளுக்குரிய தீர்வு. மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் எடுக்கும் பட்சத்திலேயே ஜி.எஸ்.பி வரிச்சலுகையினை வழங்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எமது உறவுகள் செயற்பட்டு வருகின்றார்கள்.
ஒவ்வொரு மாவட்டங்களிலிலும் எமக்கான நீதியைக் கேட்கின்றோம். அதைவிட எமது நிலங்கள் தொடர்பான பிரச்சனை பாரிய பிரச்சனையாக இருக்கின்றது. எமது உறவுகளும் காணாமல் ஆக்கப்பட்டு இல்லாத நிலையில் எமது காணிகளையும் பறிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இருப்பதற்குச் சொந்த நிலமில்லாமல் அனைத்து உறவுகளையும் இழந்து அவதியுறுகின்றோம். பல ஏக்கர் காணிகள் வைத்திருந்த நாங்கள் இன்று அரசாங்கத்தின் ஒரு ஏக்கர் திட்டம் என்று ஒன்றைக் கொண்டு வந்து எங்கள் காணிகளை அபகரிக்கின்றனர்.
எமது உறவுகள் இல்லை என்றால் மிகுதிக் காணி யாருக்கு? ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகை தொடர்பில் தீர்மானிப்பதாக இருந்தால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடயம், அரசியற் கைதிகள் விடயம், காணி விடயம் என்பனவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறமான மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் சிங்கள மக்களின் திட்டமிட்ட அத்துமீறல் காலம் காலமாக அதிகரித்துக் கொண்டு வருவதும், நாங்கள் பல தரப்பட்டவர்களிடம் இது தொடர்பில் முறையிட்டும் எதுவுமே சரிவரவில்லை.
சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளின் மேய்ச்சற்தரை ஆளுநரின் திட்டமிட்ட செயற்பாட்டினால் பறிபோகின்ற நிலைமையிலேயே இருக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசியற் கைதிகள் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அத்தோடு தற்போதைய ஆட்சி வந்ததும் இன்னும் பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்களுக்கான எவ்வித நீதி விசாரணைகளும் இடம்பெறாமல் இருக்கின்றது. எனவே நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீள வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.